

உங்கள் உதடுகள் மற்றும் வாயின் உள் பகுதி தொடர்ந்து வறண்ட நிலையில் உள்ளதா? காரணம் மற்றும் தீர்வு என்ன தெரியுமா?
நம் உடல் ஆரோக்கியம் நமக்கு மிக முக்கியம். எந்தப் பகுதியில் என்ன அசௌகரியம் நேர்ந்தாலும் உடனடியாக சரி செய்ய வேண்டியது நம் கடமை. இப்போது, நாம் எவ்வளவு தண்ணீர் குடித்து வந்த பிறகும் நம் உதடுகள் மற்றும் வாயின் உள் பகுதி காய்ந்து ஈரப்பதமின்றி இருப்பதற்கான காரணம், அதற்கான தீர்வு ஆகியவற்றைப் பார்க்கலாம்.
வாயில் வறட்சி நிலை நீடிக்கும்போது உமிழ்நீர் சுரப்பது குறையும். அதன் காரணமாக வாய் துர்நாற்றம், பற் சிதைவு போன்ற கோளாறுகள் உண்டாகும். இந்நிலையை எக்ஸ்ரோஸ்டொமியா (Xerostomia) என்கின்றனர். பரிசோதனைகள் மூலம் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்காமல், டீஹைட்ரேஷன் என்று விட்டுவிட்டால் பல பிரச்னைகளை சந்திக்க நேரும்.
வாய்க்குள் எரிச்சலான உணர்வு, உணவுகளை மெல்லவும், விழுங்கவும், பேசவும், சுவையறியவும் சிரமப்படுதல், தொண்டை மற்றும் வாய்க்குள் வீக்கம், வாயில் துர்நாற்றம், உதடுகளில் தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் அவற்றுள் சில. இவற்றை கண்டுபிடித்த பின், மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நலம் தரும்.
யூரோலாஜிக் மருந்துகள், மன அழுத்த சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மற்றும் சைக்கோலெப்டிக்ஸ் (psycholeptics) போன்றவையும் பெரியவர்களின் (adults) வாய்க்குள் வறட்சி ஏற்பட காரணமாகின்றன. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சையின்போதும், அவை நேரடியாக வாய்ப்பகுதி திசுக்கள் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளில் பாதிப்பை உண்டு பண்ணுவதால் வாய்க்குள் நீர்சத்து இல்லாமல் போவது சகஜமாகிறது.
உமிழ் நீர் ஓர் இயற்கை முறையிலான ஆன்டிபயாட்டிக்காக செயல்பட்டு வாய்க்குள் இருக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கவும், பற்களில் கறை படிவதைத் தடுக்கவும், வாய்க்குள் உராய்வு ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
உமிழ் நீரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் பற்களின் எனாமலையும் ஆரோக்கியத்தையும் சிறந்த முறையில் பாதுகாக்க உதவி புரிகின்றன. இதன் உற்பத்தியில் குறைவு உண்டாகும்போது ஓரல் ஹெல்த் பாதிப்படைய வாய்ப்பு உண்டாகிறது.
நா வறட்சியின் காரணத்தை கண்டுபிடித்த பின், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, முதலில் மவுத் வாஷ், ஜெல், சூயிங்கம், லோஸன்ஜெஸ் (lozenges) மாத்திரை போன்றவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும். சில சமயங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகள் மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது மேலும் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்க உதவும். ஓடுங்கள் டாக்டரிடம்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)