
பிரெட் என்பது ஒரு அவசர உணவாகவும், காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் பிரெட்டை அப்படியே சாப்பிடுவதை விரும்புகிறார்கள், இன்னும் சிலர் அதை டோஸ்ட் செய்து சாப்பிடுவதை விரும்புகிறார்கள். ஆனால், உண்மையில் பிரெட்டை எப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிரெட்டை டோஸ்ட் செய்யும் போது, அதில் சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. டோஸ்ட் செய்யும் போது பிரெட்டில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் பிரெட் எளிதில் ஜீரணமாகிறது. மேலும், டோஸ்ட் செய்த பிரெட்டில் உள்ள கலோரிகள் மற்றும் சர்க்கரைகள் மெதுவாக இரத்தத்தில் கலப்பதால், இரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. உண்மையில், பிரெட்டை டோஸ்ட் செய்யும் போது இரத்த சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் அளவை 25 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ப்ளைன் பிரெட்டை விட டோஸ்ட் செய்த பிரெட்டில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) சற்று குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது நாம் உண்ணும் உணவுகள் எவ்வளவு வேகமாக இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதை குறிக்கும் ஒரு அளவீடு ஆகும். டோஸ்ட் செய்த பிரெட் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மேலும், பிரெட்-ஐ டோஸ்ட் செய்வதால் கலோரிகளின் அளவு மாறாது. ப்ளைன் பிரெட்டில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறதோ அதே அளவு கலோரிகள் டோஸ்ட் செய்த பிரெட்டிலும் இருக்கும். டோஸ்ட் செய்வது பிரெட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை பாதிக்காது, ஆனால் சூடாக்கும்போது அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் ஈரப்பதம் குறைகிறது. இதனால் சிலருக்கு டோஸ்ட் செய்த பிரெட் சாப்பிடுவது எளிதாகவும், செரிமானம் ஆவதற்கும் இலகுவாகவும் இருக்கும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இன்னும் குறைக்க, பிரெட்டை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதும் ஒரு சிறந்த வழி. ப்ளைன் பிரெட் துண்டை எடுத்து, ஒரு பெட்டியில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மறுநாள் அதை டோஸ்ட் செய்து சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை 40 சதவீதம் வரை குறைக்கலாம். ஏனெனில் பிரெட்டை குளிர்விக்கும்போது, அதில் ரெசிஸ்டன்ஸ் ஸ்டார்ச் உருவாகிறது. இந்த ரெசிஸ்டன்ஸ் ஸ்டார்ச் குடல் பாக்டீரியாக்களுக்கு மிகவும் நல்லது.
ப்ளைன் பிரெட் மற்றும் டோஸ்ட் செய்த பிரெட் இரண்டுமே அவரவர் உடல்நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றது. இருப்பினும், டோஸ்ட் செய்த பிரெட் ஜீரணிக்க எளிதாகவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.