அனீமியா எனப்படும் இரத்த சோகைக்கு பேரீச்சம் பழம் மிகச் சிறந்த பலன் தரும் என்று பலராலும் கூறப்படுகிறது. பேரீச்சை இரத்த சோகையைப் போக்க மட்டுதான் பலன் தரும் என்று பலரும் நினைத்திருக்கின்றனர். ஆனால், உடலின் பல்வேறு பிரச்னைகளைப் போக்கும் அருமருந்தாக பேரீச்சம் பழம் பயன்படுகிறது. அப்படி பேரீச்சம் பழத்தின் பல்வேறு பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* பேரீச்சை பழத்தை பாலில் வேக வைத்து சாப்பிட்டால் இருமல், கபம், இளுப்பு போன்றவை போய்விடும்.
* தினமும் பாலுடன் ஒரு பேரீச்சை பழத்தை சாப்பிட்டு வர இரத்த சோகை பறந்தோடும்.
* ஒல்லி உடம்புக்காரர்கள் தினசரி தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை ஒன்று சாப்பிட்டு வர நன்றாக சதை போடும்.
* பேரீச்சை பழம் உள்ள டப்பாக்களில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். பூச்சி, வண்டு அரிக்காது.
* பேரீச்சை பழக் கொட்டைகளை காய வைத்து வறுத்து அரைத்துக் கொண்டால் காபி தூளுக்கு பதிலாக பயன்படுத்தி மலச்சிக்கலை விரட்டலாம்.
* நாற்பது வயதுக்கு மேல் சிலருக்கு முகம் வெளிறி கண்களைச் சுற்றி கருவளையம் விழுந்து முகம் எல்லாம் கருப்பு திட்டுகளாகிவிடும். இதைப் போக்க பேரீச்சம் பழங்களை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டி பவுடரை கலந்து முகத்தில் பூச வேண்டும். அதுபோல் தினசரி செய்து வந்தால் முகப்பொலிவு கூடி, இளமையான தோற்றம் வரும்.
* பேரீச்சம் பழங்கள் இரண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றம் போகும். பற்கள் பளபளவென மின்னுவதுடன், சுவாசப் புத்துணர்வும் கிடைக்கும்.
* இரண்டு பேரீச்சம் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணை கலந்து முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி தடவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வர முகம் பிரகாசமாகும்.
* அதிரசம், அப்பம் போன்ற பலகாரங்கள் செய்யும்பொழுது அதில் பேரீச்சம் பழங்களை நறுக்கிப் போட்டு செய்தால் உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும்.
* பேரீச்சை பழத்துடன் மிளகாய், இஞ்சி, தக்காளி போன்றவற்றை சேர்த்து சாஸ் செய்து வைத்துக் கொண்டால் பேல் பூரி, சமோசா, கச்சோரி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள வசதியாக இருக்கும்.
இப்படிப் பச்சையாக சாப்பிடுவதில் இருந்து பதப்படுத்தி சாப்பிடுவது, மேலும் அழகுக் குறிப்பு என்று அனைத்திற்கும் பேரீச்சம் பழமும் கொட்டையும் உபயோகமாக இருக்கிறது. பேரீச்சம் பழத்தின் முழுப்பயனை அறிந்து அதை பயன்படுத்தி பலன் பெறுவோம்!