ஒரே மணிநேரத்தில் 1000 கலோரிகள் குறையுமா? ஜும்பா நடனத்தின் மேஜிக் ரகசியம் இதோ!

Zumba dance
Zumba dance
Updated on

ஜும்பா(Zumba) என்பது லத்தீன் மற்றும் சர்வதேச இசையுடன் நடன அசைவுகளை இணைத்து செய்யப்படும் ஒரு உற்சாகமான உயர்தர ஏரோபிக்(Aerobic Fitness) உடற்பயிற்சியாகும். 1990களில் கொலம்பிய நடனக் கலைஞர் ஆல்பர்டோ பெரேஸால் உருவாக்கப்பட்ட இது, சல்சா, மெரெங்கு, கும்பியா, ஹிப்-ஹாப் போன்ற நடனங்களை உள்ளடக்கிய ஒரு 'டான்ஸ் பார்ட்டி' போன்ற உடற்பயிற்சி முறையாகும்.

ஜும்பா நடனத்தின்(zumba dance) வகைகள்:

ஜும்பா வகைகள் முக்கியமாக வயது, உடற்தகுதி நிலை மற்றும் இலக்குகளைப் பொறுத்து மாறுபடும்.

1. ஜும்பா பிட்னெஸ்:

இது அடிப்படை ஜும்பா வகை. வேகமான இசையுடன் கூடிய ஏரோபிக்ஸ் மற்றும் நடனக் கலவை.

2. ஜும்பா கோல்ட்:

வயதானவர்கள் மற்றும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கானது. இது குறைந்த தீவிரத்தன்மை கொண்டது.

3. அக்வா ஜும்பா:

தண்ணீருக்குள் செய்யப்படும் ஜும்பா. இது மூட்டுகளுக்கு அழுத்தம் தராமல், உடல் தசை வலிமைக்கு உதவுகிறது.

4. ஜும்பா டோனிங்:

இது 'டோனிங் ஸ்டிக்ஸ்' அல்லது சிறிய எடைகளைப் பயன்படுத்தி தசைகளை வலுப்படுத்தவும் வடிவமைக்கவும் உதவுகிறது.

5. ஜூம்பா ஸ்டெப்:

ஸ்டெப் ஏரோபிக்ஸ் உடன் ஜும்பாவை இணைத்து கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்துகிறது.

6. ஜும்பா கிட்ஸ்:

7-11 வயது குழந்தைகளுக்கானது. வேடிக்கையான மற்றும் எளிய நடன அசைவுகளைக் கொண்டது.

7. ஜும்பா சென்டாவ்(Zumba Sentao):

நாற்காலியைப் பயன்படுத்தி அமர்ந்த நிலையிலேயே தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி.

8. சர்க்கிள் மொபிலிட்டி:

மூட்டு ஆரோக்கியம், நெகிழ்வுத்தன்மை மற்றும் தசை மீட்புக்கான பயிற்சி இது.

இதன் நன்மைகள்:

ஒரு மணி நேர ஜும்பா பயிற்சியில் சுமார் 600 முதல் 1,000 கலோரிகள் வரை எரிக்க முடியும். இது வேகமான எடை இழப்புக்கு உதவுகிறது.

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும்(Cardio) பயிற்சிகளை நடன வடிவில் எளிமையான வழியில் வழங்குகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

சலிப்பான உடற்பயிற்சிகளைப் போலல்லாமல் நடனமாடிக்கொண்டே செய்வதால் மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியையும் தருகிறது.

நடனத்தின் போது வெளியாகும் என்டோர்பின்கள்(Endorphins) மற்றும் டோபமைன்(Dopamine) ஹார்மோன்கள் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியைத் தருகின்றன.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை: நீங்கள் தினமும் 2 கப் மேல் டீ குடிப்பவரா? அப்போ இதைத் தெரிஞ்சுக்கோங்க!
Zumba dance

இது கை, கால், இடுப்பு, வயிறு என உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பயிற்சி அளித்து தசைகளை வலுப்படுத்துகிறது. உடல் முழுவதும் உள்ள தசைகளை வலுப்படுத்தி உடலை அழகான வடிவத்திற்கு(Toning) கொண்டுவர உதவுகிறது.

இதற்கு நடன அனுபவம் எதுவும் தேவையில்லை. வயது, உடற்பகுதி நிலைகளைப் பொறுத்து பயிற்சிகளை மாற்றிக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், உடல் ஒருங்கிணைப்பு(coordination) மற்றும் சகிப்புத்தன்மை(Stamina) ஆகியவற்றை அதிகரிக்க ஜும்பா நடனம் ஒரு சிறந்த வழியாகும்.

அதிக மூட்டு வலி மற்றும் இதய பிரச்சனைகள் இருந்தால் ஜும்பா வகுப்பில் சேருவதற்கு முன் குடும்ப மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com