உலக நாடுகள் தற்போது அதிக அளவிலான ராணுவ தளவாட பொருட்களை வாங்க பெரிய அளவில் செலவு செய்ய தொடங்கி இருப்பதாக ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த அமைப்பு தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் 2022 ஆம் ஆண்டு ராணுவ தளவாட உற்பத்தியில் முதல் 100 நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மிகப்பெரும்பான்மையாக இருக்கின்றன. இரண்டாவது இடத்தில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் காரணமாகவும், தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இஸ்ரேல் பாலஸ்தீன போர் சூழல் காரணமாகவும் உலக நாடுகள் அதிக அளவிலான ராணுவ தளவாட பொருட்களை கொள்முதல் செய்து இருப்பு வைக்க ஆர்வம் காட்டுகின்றன. இதனால் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சர்வதேச அரங்கில் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும் இந்த பட்டியலில் மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் ஆயுதங்கள் உற்பத்தி செய்து 41வது இடத்தில் உள்ளது. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் 1.9 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து 63 வது இடத்தில் உள்ளது. மசகான் டாக்ஸ் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து 89 இடத்தில் உள்ளது. மேலும் இந்த மூன்று நிறுவனங்களும் மொத்த விற்பனையில் ஒரு சதவீத அளவிற்கு மட்டுமே ஆயுத உற்பத்தி மேற்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிக அளவிலான ஆயுதங்களை கையிருப்பு வைத்திருக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அடுத்த இடத்தில் சீனா, ரஷ்யா ஆகியவையும், 4வது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
மேலும் இந்தியா தற்போது 1.8 லட்சம் கோடி அளவிற்கு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது அமெரிக்காவை சேர்ந்த ஆயுத நிறுவனங்களுக்கு அதிக அளவிலான ஆர்டர்கள் வருகின்றன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அவைகள் நிராகரிக்கப்படுகின்றன. இப்படி உலகின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக ஆயுத நிறுவனங்கள் மாறி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.