பட்டியல் மற்றும் பழங்குடியினர் தொடங்கியுள்ள 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உருவாக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பரவலான வளர்ச்சியை உருவாக்க தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூக மக்களினுடைய பொருளாதார நலனை மேம்படுத்த தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு நேரடியாக முதலீடு செய்திருக்கிறது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தொடங்கியுள்ள 5 புத்தொழில் நிறுவனங்களில் உதவித்திட்டத்தின் கீழ் 6.50 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறது. எலக்ட்ரிக் தொழிலில் ஈடுபட்டு இகாப்மின் டெக்னாலஜி நிறுவனத்தில் 3 கோடி ரூபாயும், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள அதிபன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 2.20 கோடி ரூபாயும், ஆரோக்கிய பராமரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள சிஓஇஒ நிறுவனத்தில் 60 லட்சம் ரூபாயும், மண்வாசனை ட்ரெடிஷனல் புட் நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாயும், உணவுத் தொழில் ஈடுபட்டுள்ள நாஞ்சில் நாடு கனி பழங்குடியினர் பெண்கள் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசு முதலீடு செய்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு முதலீட்டைப் பெற்றதன் மூலம் இந்நிறுவனங்களினுடைய நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதாகவும், மேலும் இந்நிறுவனம் வளர்ச்சி பாதைக்கான பொருளாதார உதவியாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.