Financial Plans 
பொருளாதாரம்

சிறப்பான நிதி திட்டமிடலை மேற்கொள்வது எப்படி?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இன்றைய காலகட்டத்தில் நாம் சம்பாதிக்கும் பணத்தை திறம்பட கையாண்டால் மட்டுமே கடன் எனும் மாய வலையில் சிக்காமல் தப்பிக்க முடியும். இதற்கு சரியான நேரத்தில் சிறப்பான நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் வீண் செலவுகளில் உங்கள் பணம் விரயமாவது மட்டுமின்றி, சேமிப்பின்றி வருங்காலத்தை பல கவலைகளுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் நிதி திட்டம், நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உதவுவதோடு, எதிராபாராத செலவுகளைச் சமாளிக்கவும் உதவும். உங்கள் வாழ்வின் நிதி பயணத்திற்கான மிகச்சிறந்த திசைகாட்டி எனவும் நிதி திட்டமிடலை குறிப்பிடலாம். வாழ்க்கை முழுக்க உதவும் இந்த நிதி திட்டமிடலை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டுமல்லவா! அதற்கான வழிமுறைகளை இப்போது காண்போம்.

உங்களின் எதிர்காலத் திட்டம்:

உங்களின் வலுவான நிதி திட்டமிடலை சிறப்பானதாக்க சீரான யுக்திகள் அவசியமாகும். ஒருவர் தனக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ள இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும். அவ்வகையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகள் என்னென்ன என்பதைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். அதோடு எதிர்கால இலக்குகள் என்ன என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். நமது இலக்குகளை அடைவதற்கான சரியான யுக்தியை வகுத்து, அதன் பாதையில் பயணிக்க வேண்டும்.

நிதி இலக்குகள்:

ஒவ்வொருவரின் நிதி இலக்குகளும் வெவ்வேறாக இருக்கலாம். இதில் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை அடையும் பாதையாக இருப்பவை தான் நிதி திட்டமிடல். முதலீடு, ஓய்வுகால திட்டமிடல், வரி சேமிப்பு மற்றும் காப்பீடு என ஒவ்வொருவருக்கும் அவர்களின் சூழலுக்கு ஏற்ப பல நிதி இலக்குகள் உள்ளன.

பண மேலாண்மை:

நிதி திட்டமிடலில் முக்கிய அம்சமே பண மேலாண்மை தான். நாம் சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்தாலே, வீண் செலவுகளைக் குறைத்து விட முடியும். கடன் வாங்கியவர்கள், அதிலிருந்து விடுபட்டு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கி அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும். முதலீட்டுத் திட்டங்களில் நமது கவனத்தைச் செலுத்துவதற்கு முன், அவசர கால நிதியை ஏற்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும்.

கடன் ஆய்வு:

உங்களின் தற்போதைய நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வரவு, செலவு மற்றும் கடன் பொறுப்புகளை ஆராய வேண்டும். கடன் இருக்கும் பட்சத்தில் அதனைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உங்களின் தினசரி செலவுகளைக் கண்காணித்து, அதில் அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வீண் செலவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

ஓய்வு காலம்:

ஓய்வு கால திட்டமிடலை மேற்கொள்ளும் போது, வரி சேமிப்புகளையும் மனதில் கொள்ள வேண்டும். ஒருவரது நிதி நிலைமை மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்பவே முதலீடு மற்றும் சேமிப்பு அமைய வேண்டும். ஓய்வுகால முதலீடுகள் நமது தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவைகளாக இருத்தல் அவசியம். இதில் குழப்பம் இருந்தால் பொருளாதார ஆலோசகர்களை அணுகி, ஆலோசனை பெறலாம்.

மனசாட்சியே நம் உண்மையான முகம்!

தங்கம் மற்றும் கவரிங் நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்யும் தந்திரங்கள்!

வேர்க்கடலை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் அலர்ஜி ஏற்படும் தெரியுமா?

நல்லவர்கள் தோல்வியடைவதும் தீயவர்கள் வெற்றி பெறுவதும் ஏன்?

வாழ்க்கையை சுமுகமாக எடுத்துச்செல்ல வேண்டிய சில விதிமுறைகள்!

SCROLL FOR NEXT