விஜய் டிவியில் பிக்பாஸ் தொடர் ஆரம்பமாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செட் அமைக்கும் பணியில் ஒரு வட மாநிலத்தவர் தவறி விழுந்து படுகாயத்துடன் உயிர்த்தப்பியுள்ளார்.
விஜய் டிவியில் ஒவ்வொருமுறையும் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தொடர். மொத்தம் இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 7 சீசனையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். வாரம் ஐந்து நாட்களைவிட கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைக்கும்.
கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர். மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தவகையில் இந்த சீசனிலிருந்து அவர் விலகியது உறுதியானது. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்போது பிக்பாஸ் சீசன் 8ன் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் விஜய் டிவி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இதற்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட 7 சீசன்களில் பெரியளவு பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை போட்டியாளர்களை மீண்டும் களமிறக்க திட்டமிட்டுள்ளனராம்.
இதனையடுத்து நிகழ்ச்சியின் தொடக்க தேதி குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட விஜய் சேதுபதியின் ப்ரோமோ வீடியோவுடன் தேதி மட்டும் இணைத்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமான தொடக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் தான் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாஹின் கான் என்பவர் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் செய்து வந்த நிலையில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
கீழே விழுந்ததில் அவருக்கு கை, இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த அந்த வட மாநில தொழிலாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.