pudhu vasantham serial 
சின்னத்திரை / OTT

சின்னத் திரையில் 'புது வசந்த' தீபாவளி!

ரெ. ஆத்மநாதன்
Deepavali Strip 2024

மழை நேரத்தில் வந்தாலும், மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத பண்டிகை தீபாவளி மட்டுமே! உடலுக்கு ஆடை- உள்ளே உள்ள வயிற்றுக்கு விதம் விதமான இனிப்பு, காரங்கள் - மனமகிழ்ச்சிக்குப் பட்டாசுகள் என்று ஒட்டு மொத்தமாக நம்மை உற்சாக உலகத்துக்கு அழைத்துச் செல்லும் விழா இந்தத் தீப ஒளித் திருநாள்! பிறந்த குழந்தை முதல் பல்போன தாத்தா - பாட்டி வரை அனைவருக்கும் உகந்தது இத்திருநாள் என்றால் அதில் மிகையில்லை!

இப்பொழுதெல்லாம் வீடுகளில் உறவினர்கள் வந்து போவது முன்னே பின்னே  இருந்தாலும், வீட்டுக் காரர்களுக்கு நிரந்தர உறவாக உள்ளது சின்னத்திரைதான்! அவரவருக்குப் பிடித்த சீரியல் வரும்போது கைபேசியில் பேசுவதைக்கூடத் தவிர்த்து விடுகிறார்கள்! சிலர் வெளியிலிருந்து வரும் அழைப்பைத் தவிர்க்க, செல்லையே ‘ஆப்’ செய்தும் வைத்து விடுகிறார்கள்! அந்த அளவுக்கு சீரியல்கள் சீரிய இடத்தைப் பிடித்து விட்டன.

வருகின்ற அத்தனை சீரியல்களிலும் தீபாவளி ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட்டாலும், அதனை உயர்வான இடத்திற்குக் கொண்டு சென்றவர்கள் ‘புது வசந்தம்’ தொடரைச் சேர்ந்தவர்கள்தான்!

சில சீரியல்களில் புத்தாடை வாங்கினார்கள்! பல தொடர்களில் பட்டாசு கொளுத்தினார்கள்! ஒன்றில் பைவ் ஸ்டார் ஓட்டலில் டேபிள் புக் செய்தார்கள்! மற்றொன்றில் மருமகள் வீட்டைப் பழி வாங்க வேண்டுமென்பதற்காகக் குடும்ப சகிதமாக மருமகள் வீட்டில் தீபாவளி கொண்டாடத் திட்டமிட்டார்கள்! அவர்கள் வீட்டுக்கு அதிகச் செலவை ஏற்படுத்தித் திணற அடிக்க வேண்டுமாம்!

இந்த நிலையில், புது வசந்தம் தொடரில், நாயகி செல்வியின் சொந்தக் கிராமத்திற்குக் குடும்பத்துடன் அனைவரும் செல்வதும், அங்கு கிராமத்தாரின் அன்பில் அனைவரும் திளைப்பதும், நமக்கும் உற்சாகத்தைத் தருகிறது! அரண்மனை போன்ற வீட்டை விட்டு விட்டு, ஒற்றை மகளுக்காகப் பெற்றோர் சென்னையிலேயே தங்கி விடுவது மகளின் மீது அவர்கள் கொண்டுள்ள பாசத்தையும், பாசமுள்ள ஊர்க்காரர்களை விட்டு விட்டு நகரிலேயே வசிப்பதன் மூலம் பெண்ணுக்காக அவர்கள் செய்யும் தியாகத்தையும், பறை சாற்றுவதாக அமைந்துள்ளன.

செல்விக்கும் வேலுவுக்குந்தான் தலைத் தீபாவளி என்றாலும், வேலுவின் அண்ணன்-அண்ணி, அக்கா-அவளின் வீட்டுக்காரர், அப்பா-அம்மா, தம்பி-தங்கை என்று எல்லோரையும் அழைத்து, அத்தனை பேருக்கும் புத்தாடைகள், பரிசுப் பொருட்கள், பட்டாசு என்று வாங்கிக் கொடுப்பது சிறப்பான ஒன்று!

தங்களிடம் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கும் கீர்த்தியின் தாயைக் கூப்பிட்டு, அவர் கையால் அனைவருக்கும் தீபாவளியன்று காலை எண்ணை வைத்துவிடச் சொல்வது அருமை!

ஆடைகள் வாங்குவது முக்கியமென்றால், அவற்றை யார் கையால் கொடுக்கச் செய்ய வேண்டுமென்பது அதை விட முக்கியம்! அவற்றை வேலு, திருவின் அப்பா-அம்மா கையால் கொடுக்கச் செய்வது அற்புதம்!

வீட்டில்தான் இப்படியென்றால், முதல் நாளே நம்பிக்கையான தன் ஆளிடம், போதுமான ஆடுகள் வாங்கி அடித்து அனைத்து உறவினர் வீடுகளுக்கும் கறியைக் காலையிலேயே கொடுத்து விட ஏற்பாடு செய்து விடுவது, ஊர்ப் பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!

ஊராருக்கும், புதுத் துணிகள் பட்டாசுகள் என்று வாங்கி வைத்து, தீபாவளி அன்று அதனை விநியோகிக்கக் காத்திருக்கும் செல்வியின் தாய், தந்தையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

தோப்புக்கு வந்தவர்களை இளநீர் கொடுத்து உபசரிப்பதும்,மாவரைக்க மில்லுக்கு வந்தவர்களுக்குக் குளிர்பானம் கொடுத்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதும் கிராமத்துப் பாணி என்றாலும், விருந்தோம்பலின் அடையாளங்கள்; அமைதியின் அஸ்தி வாரங்கள்!அந்த விருந்தோம்பலில் வெளிப்படுவது செல்வி குடும்பத்தாரின் வினயமான அணுகுமுறையே!

எனவேதான் சின்னத்திரை தொடர்களின் தீபாவளியில் சிறப்பான இடத்தைப் பெற்று முந்தி நிற்பது ‘புது வசந்தம்’ தொடரின் தீபாவளியே என்று கூறுகிறோம்!

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT