சின்னத்திரை / OTT

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

கல்கி

-தனுஜா ஜெயராமன்.

ந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.  

"சிவரஞ்சனியும் சில பெண்களும்" என்ற திரைபடத்தில் நடித்த லஷ்மி ப்ரியா சிறந்த துணைநடிகைக்கான விருதினை வென்றுள்ளார். லஷ்மி பிரியா ஒரு திறமையான நடிகை என்பது ஏற்கனவே பலரும் அறிந்ததே. பல்வேறு சவால் நிறைந்த கேரக்டர்களை மிக அநாயாசமாக  நடித்து விடுவதில் வல்லவர். 

அதேபோல "சிவரஞ்சனியும் சிலபெண்களும்" திரைப்படத்திலும் லஷ்மி ப்ரியா அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த படம்  பிரபல இயக்குநர் வசந்த்தின் மிகச்சிறந்த படைப்பு எனலாம்.

இத்திரைப்படத்தில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த லஷ்மி பிரியா ஓட்டப்பந்தய வீராங்கனையாக பயிற்சி மேற்கொண்டு வருவார். கல்லூரியில் படிக்கும் போது பல்வேறு பரிசுகளையும் பெற்றிருப்பார். குடும்ப சூழல் காரணமாக படிப்பையும், விளையாட்டையும் பாதியில் கைவிட்டு விட்டு வலுக்கட்டாயமாக திருமண பந்தத்தில் தள்ளப்படுவார். அப்போது அவர் காட்டும் முகபாவங்கள் இச்சூழலில் தள்ளப்பட்ட எத்தனையோ பெண்களின் மனதை பிரதிபலித்து நம் கண்முன்னே நிறுத்தும்.

திருமண பந்தத்தில் நுழையும் லஷ்மி பிரியாவிற்கு வேறு எதைப் பற்றியும் நினைக்க நேரமில்லாதவாறு கணவராலும் மாமியாராலும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவார். தொடர்ந்த அழுத்தங்கள் தாளாமல் ஒரு நாள் அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி அவள் படித்த காலேஜிற்கு செல்வார். அங்கு கல்லூரி பிரின்ஸ்பாலிடம் தான் வாங்கிய மெடல்களை  பார்க்க விரும்புவதாக கூறுவாள்.

அவரும் ரெக்கார்ட் ரூமில் இருப்பதாக சொல்லி அனுப்ப, அங்கே தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான ஷீல்டுகளில் தன்னுடைய ஷீல்டை தேடியலைவாள். அக்காட்சியில் எவ்வளவு தேடியும் அது கிடைக்காத ஏமாற்றத்தையும், தன்னிரக்கத்தையும் தனது அநாயாசமான முகபாவங்களால் நடித்து லஷ்மி ப்ரியா நம் இதயங்களை நனைப்பார். 

கடைசி காட்சியில் லஷ்மி பிரியாவின் மகள் தனது லன்ச் பாக்ஸை மறந்து வைத்து விட்டு பள்ளி பேருந்தில் ஏறிச்செல்ல…அதை சிறிது நேரம் கழித்து கவனித்த லஷ்மி பிரியா அந்த லன்ச்பாக்ஸை தூக்கிக்கொண்டு நைட்டியுடன் பேருந்தின் பின்னால் ஓடிவந்து பேருந்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதனை பிடிக்கும் காட்சிகள் அற்புதம்! 

லஷ்மி ப்ரியா பஸ்ஸுக்கு இணையாக ஒடிவந்து மகளின் கையில் டிபன்பாக்ஸை திணித்து மூச்சு வாங்க…பேருந்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டுவார்கள். அப்போது நம் கைகளும் நம்மை அறியாமல் கூட சேர்ந்து தட்டிக்கொண்டிருக்கும். 

பேருந்து போனபின்பு  தன்னம்பிக்கையுடன் "நம்மால் இன்னமும் சாதிக்கமுடியும்" என்ற முகபாவத்துடன் லஷ்மி பிரியா நடந்து செல்வதாக காட்சியை நிறைவு செய்திருப்பார் இயக்குநர் வசந்த். 

இந்த திரைபடத்தில் நடுத்தர குடும்பத்தின் மனநிலை அப்படியே பிரதிபலித்து, கையாலாகாத பெண்ணாக , கல்லூரியில் விளையாட்டு வீராங்கனையாக, மாமியார் வீட்டில் சூழ்நிலை கைதியாக, ஏக்கமும் இயலாமையுமாக தன் மனவலிகளை மறைத்தபடி வலம் வரும் லஷ்மி பிரியாவின் நடிப்பினை யாராலும் மறக்க இயலாது. இந்த விருதினை பெறுவதற்கு நூறுசதவீதம் பொருத்தமானவர் என்பதில் வியப்பேதுமில்லை.

விருது பெற்ற செய்தியோடு மகிழ்வாய் வலம் வரப்போகும் லஷ்மி பிரியாவை தமிழ்திரையுலகம்  மேன்மேலும் பயன்படுத்தி கொள்ளட்டும்! 

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT