"நாம் காலண்டரில் ஒரு தேதியை கிழிக்கும் போது, 'நேற்று நாம் என்ன என்ன செய்தோம்?' என்று யோசிப்போம். ஆனால் என் சிஷ்யன் தேதியை கிழிக்கும் போது, 'நான் இன்றைய நாளை எப்படி பயனுள்ளதாக செய்ய வேண்டும்?' என்று யோசிப்பார் போல் தோன்றுகிறது. அதனால்தான் அவரால் இது போன்ற சிறந்த கவிதைகளை தர முடிகிறது."
சிறந்த கவிதை என்று இந்த பிரபல ஆளுமை சொன்னது மற்றொரு ஆளுமை எழுதிய '144 கவிதைகள்' என்ற கவிதை தொகுப்பை.
சொன்னவர் இயக்குனர் கே. பாக்கியராஜ். சிஷ்யன் என்று அவர் குறிப்பிட்டது பார்த்திபன் அவர்களை.
1990 களுக்கு பின்பு, புதுமை என்ற சொல்லுக்கு தமிழ் சினிமாவில் அடையாளமாக திகழும் பார்த்திபனின் பிறந்தநாள் இன்று நவம்பர் 15. HBD Parthiban Radhakrishnan Sir
1957 ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்த பார்த்திபன் தனது 67 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த பார்த்திபன் 1980 களில் சினிமாவில் நுழைந்த போது தமிழ் சினிமாவில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களும் அதிகம் இருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் தெலுங்கு பேசும் குடும்ப பின்னணியில் இருந்து வந்த பார்த்திபன் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். 1981ல் வெளியான ராணுவ வீரன் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின் பாக்கியராஜ் பட்டறையில் சேர்ந்து பட்டை தீட்டப் பட்டார்.1989 ல் புதிய பாதை படத்தை இயக்கி தனக்கென்று ஒரு புதிய பாதையை சினிமாவில் அமைத்து கொண்டு பயணிக்கிறார் பார்த்திபன்.
புதுமை: பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட ஒரு பெண் கண்டிப்பாக இறக்க வேண்டும் என்றிருந்த தமிழ் சினிமாவில் அந்த பெண் தன்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிய ஆணுடன் போராடி வாழ்ந்து காட்ட முடியும் என்று புதுமையான கதை சொன்ன 'புதிய பாதை' 1989 ல் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு படத்திற்கு கதை முக்கியம் என்பார்கள். ஆனால் கதையே இல்லாமல் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' என்ற படத்தை இயக்கி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். 2019 ஆம் ஆண்டு பார்த்திபன், தான் மட்டுமே நடித்து 'ஒத்த செருப்பு' என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். படம் பெரிய வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டபட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரே ஷாட்டில் எடுத்து வெளியான 'இரவின் நிழல்' திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கிறது. இங்கே சொன்னதெல்லாம் சில துளிகள்தான். பார்த்திபன் செய்த புதுமைகள் பல உள்ளன.
எழுத்து: பார்த்திபனின் அப்பா ராதாகிருஷ்ணன் அதிகம் படிகாத்தவர். இருப்பினும் அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். இந்த பழக்கம் பார்த்திபனிடமும் தொற்றிக்கொண்டது. தமிழ் வாணன், சாண்டில்யன், சுஜாதா, கல்கி என பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை பள்ளி நாட்களிலேயே படிக்க தொடங்கி விட்டார் பார்த்திபன். எழுதும் கதைகளில் சில விஷயங்களை சொல்லி விட்டும், சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விடும் சுஜாதாவின் எழுத்துக்கள் தன்னை மிகவும் கவர்ந்தது என்கிறார் பார்த்திபன். சில வருடங்களுக்கு முன்பு தன் எழுத்தில் உருவான கிறுக்கல்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். 'தலைப்பு தான் கிறுக்கல். உள்ளே நல்ல கருத்துகள் இருக்கிறது' என்று கருணாநிதி பாராட்டினார். கடந்த 2020-21 கொரோனா கால கட்டத்தில் படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தை பயனுள்ளதாக மாற்ற பேனாவை கையில் எடுத்தார் பார்த்திபன். 144 கவிதைகளை எழுதி '144 கவிதைகள்' என்ற பெயரில் புத்தகமாக கொண்டு வந்தார். பலரின் பாரட்டை பெற்றது இந்த கவிதைகள்.
துணிச்சல்: முதல் படமான புதிய பாதையை, கமலின் அபூர்வ சகோதரர்கள் படம் வெளியாகும் நாளில் வெளியிட வேண்டாம் என்று பலர் அறிவுரை செய்தார்கள். ஆனால் இதே நாளில் புதிய பாதையை துணிச்சலுடன் வெளியிட்டு வெற்றி பெற்றார் பார்த்திபன். 34 வருடங்களுக்கு பின் அதே போன்று இந்த 2024 வருடம் ஜூலை மாதம் கமலின் இந்தியன் 2 வெளியான நாளில் தனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் வெளியான டீன்ஸ் படத்தை வெளியிட்டார் பார்த்திபன்.
பல படங்களை தயாரித்து உள்ளார் பார்த்திபன். சில படங்களில் தோல்வியும், சில படங்களில் வெற்றியும் அடைந்துள்ளார். வெற்றி கிடைக்கும் போது ஆடாமலும், தோல்வி வரும் போது துவளாமலும் இருப்பவர் பார்த்திபன். இந்த குணம் தான் சினிமா துறையில் இவர் 34 ஆண்டுகளாக நிலைத்து நிமிர்ந்து இருப்பதற்கு காரணம்.
சிரிக்க, சிந்திக்க வைக்கும் பேச்சாற்றல்: கமல் நடித்த உத்தமவில்லன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் பார்த்திபன். படத்தை பாராட்டி பேசும் ஓரிடத்தில் "சுருதி சுத்தமாக, அக்ஷர பிழை இல்லாமல் இந்த படம் வந்திருக்கிறது" என்றார். கமல் உட்பட அனைவருமே கைத்தட்டி மகிழ்ந்தனர். (கமல் அவர்களின் மகள்களின் பெயரும் சுருதி மற்றும் அக்ஷரா என்பதாகும்)
ஒரு முறை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை அழைத்து திரைத்துறையினர் விழா எடுத்தனர். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, வடிவேலுவுடன் இணைந்து காமெடி நிகழ்ச்சியையும் நடத்தி காட்டினார் பார்த்திபன். பொது வெளியில் அதிகம் வாய் விட்டு சிரிக்காத ஜெயலலிதா அன்று அந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் - வடிவேலுவின் நிகழ்ச்சியை பார்த்து வாய் விட்டு சிரித்தார். மைக்கை கையில் எடுத்தால் அரங்கை கலகலப்பாக்கும் திறமை பெற்றவர் பார்த்திபன்.
மனித நேயம்: சினிமா தாண்டி சமூக அக்கறையும் கொண்டவர் பார்த்திபன். விளிம்புநிலை மக்களுக்கு பார்த்திபன் மனித நேய மன்றம் என்ற அமைப்பை 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். ரத்த தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் என பல்வேறு உதவிகளை இந்த மன்றத்தின் மூலம் செய்து வருகிறார். குறிப்பாக படிக்க வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு படிப்பை தொடர இந்த மன்றத்தின் வழியாக உதவிகள் செய்து வருகிறார். (நடிகர் கார்த்தி இது போன்ற பல ஆக்க பூர்வமான விஷயங்களில் ஈடுபட பார்த்திபனின் மனித நேய மன்றத்தின் உந்துதலும் ஒரு காரணம்)
சினிமா, ஓ டி டி இரண்டிலும் சிறந்த படைப்புகளை தர முயற்சி செய்யும் பல புதிய இயக்குனர்கள் டிக் செய்யும் முதல் நடிகராக இருக்கிறார் பார்த்திபன். ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று, தன் தனித்துவத்தை நிலைநாட்டி வருகிறார் பார்த்திபன்.
புதிய பாதையில் ஜோடியாக நடித்த சீதாவை வாழ்க்கையிலும் கை பிடித்தார் பார்த்திபன். சினிமா உலகில் பல பரிமாணங்களில் சாதனைகள் பல புரிந்து வரும் பார்த்திபன், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சில சறுக்கல்களுக்காக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறார். இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி, வேறு யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவ கலைஞர் அவர் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இன்னும் பல ஆண்டுகள் அவர் வாழ்ந்து மேலும் பல மாறுபட்ட படைப்புகள் தர இந்த பிறந்தநாளில் பார்த்திபனை வாழ்த்துவோம்.