தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவரின் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் மீம்ஸ்களில் கூட வடிவேலுவின் முகம் தான் அதிகமாக இருக்கும். இந்நிலையில், தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கப் போகிறார் எனத் தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் நடிகர், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் சின்னத்திரைக்கு வருவது இயல்பாகி விட்டது. அவ்வகையில் தற்போது வடிவேலுவும் சின்னத்திரைக்கு வர இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவுக்கு ஏன் பட வாய்ப்புகள் குறைந்தன? ஏன் சின்னத்திரைக்கு வர வேண்டும்? என்ற சில கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுகிறது அல்லவா!
காமெடியில் கலக்கிய வடிவேலு, நடிகராக களம் கண்ட முதல் திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலி மற்றும் எலி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் பிறகு, இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சித்த போது, அப்படத்தை தயாரிக்க இருந்த இயக்குநர் சங்கருக்கும், வடிவேலுவுக்கும் மோதல் உண்டானது. இதனால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பின் இப்பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சமரசம் செய்ய முயற்சித்தும், முடிவுக்கு வராததால் படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமலேயே இருந்தார் வடிவேலு.
பின்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும், இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. ஆதலால், சினிமாவில் வடிவேலுவின் இரண்டாவது அவதாரம் தொடக்கத்திலேயே எடுபடாமல் போனது. பட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு, தற்போது சின்னத்திரையின் கதவுகள் திறந்துள்ளன.
வெள்ளித்திரையில் வாய்ப்புகள் மங்கிய நிலையில், சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வெகு விரைவிலேயே இதற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. வடிவேலுவை வைத்து ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தினால், விரைவில் மக்களிடையே பிரபலமடையும் என்பதே தனியார் தொலைக்காட்சியின் திட்டமாக இருக்கும்.
இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொள்ள ஒரு எபிசோடுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.
வெள்ளித்திரையில் தனது இடத்தை இழந்த வடிவேலு, சின்னத்திரையில் சாதிப்பாரா? சின்னத்திரையில் வடிவேலுவின் நகைச்சுவை எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களாகிய நீங்களே கமெண்ட் செய்யுங்கள்.