கோவை சரளா என்ற பெயரைக் கேட்டாலே போதும் உள்ளத்தில் சிரிப்பு குமிழியிடும்.
அந்த அளவுக்கு தமது கோவைத்தமிழ் ஸ்லாங் கலந்த நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் அவர்.
ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு தனியாக ஒரு பெண்மணி தரமான நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக நீண்ட காலமாக தென்னிந்திய திரைப்படங்களில் சோபித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது அவர் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் இன்று அவரை ரசிக்காதவர்கள் என்று எவருமிருக்க வாய்ப்பில்லை. நகைச்சுவை தாண்டியும் சரளாவின் பண்பட்ட நடிப்பை OTT யில் ரிலீஸான செம்பி திரைப்படத்தில் காணலாம்.
சமீபத்தில் கோவை சரளா சாய் வித் சித்ரா எனும் இணையதள நேர்காணலொன்றில் சுவாரஸ்யமாகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதில் சித்ரா லட்சுமணனின் அனைத்து கேள்விகளுக்கும் சரளமாகப் பதிலளித்திருந்தார்.
நகைச்சுவையில் மனோரமா ஆச்சிக்குப் பிறகான வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் எனும் பெரிய பொறுப்பைச் சுமந்து கொண்டிருந்தாலும் நடுவில் முழுதாகப் பத்து ஆண்டுகள் கோவை சரளா தமிழ் சினிமாக்களில் தலைகாட்டவே இல்லை. அது ஏன் எனும் கேள்விக்கு சரளா அளித்த பதில்;
பத்தாண்டுகளாக நான் இங்கு நடிக்கவில்லையே தவிர அந்தக் காலகட்டத்தில் தெலுங்கு சினிமா எனக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருந்தது. வி.சேகர் இயக்கத்தில் ‘காலம் மாறிப் போச்சு ‘ என்றொரு திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்தப்படம் தான் ஆதாரம். அதைப் பார்த்து தெலுங்கிலும் அந்தக் கதாபாத்திரத்தில் நானே தான் நடித்தாக வேண்டும் என்று எடிட்டர் மோகன் வலியுறுத்தினார். அதனால் நான் தெலுங்குக்குச் சென்றேன். அந்தப் படம் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட். எனக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் எல்லாம் செய்தார்கள் தெலுங்கு ரசிகர்கள்.
தவிர அங்கெல்லாம் 45 காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே ஒரு படத்தில் இணைந்து ஒற்றுமையாக நடிக்கும் விஷயமெல்லாம் கூட அங்கு நடக்கும். இங்கு தான் ஒருவரோடு மற்றொருவர் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று கூட நினைக்கிறார்கள். அங்கு அப்படி இல்லை. பிரம்மானந்தத்தைப் பாருங்கள்.
உண்மையில் அவர் ஒரு நகைச்சுவை லெஜண்ட். கவுண்டமணி காலத்தில் இருந்து அவர் அங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்றும் கூட அவர் அங்கு பிஸி தான்.
தெலுங்குத் திரைப்படங்களில் அவர் சும்மா ஒரு காட்சியில் வந்தால் கூடப் போதும் என்று நினைத்து இயக்குநர்களும், நடிகர்களும் அவரைக் கொண்டாடி தங்களது திரைப்படங்களில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் முகபாவனைகளிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் அவர். என்னை பாசத்துடன் ‘செல்லி’ என்று அழைப்பார். திரைப்பட உலகில் நகைச்சுவை நடிப்பில் இத்தனை வருடங்களாக மார்க்கெட் இழக்காமல் ஒருவர் நீடிப்பது என்பது அதிசயம் தான், ஏனென்றால் சிலர் சில காலம் வரை பீக்கில் இருப்பார்கள், பிறகு வேறு சிலர் வருவார்கள். அது தான் வழக்கம் ஆனால் பிரம்மானந்தத்தைப் பொருத்தவரை அவர் இன்றும் தெலுங்கில் முதன்மையான காமெடி நடிகராக நீடித்து வருகிறார். என்று கூறி இருந்தார்.