கிருஷ்ணகிரி அருகே வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிக்குப்பம் எனும் தன்னுடைய பூர்வீக கிராமத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள தனது பெற்றோரின் நினைவகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி அருகே வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிக்குப்பம் எனும் கிராமம்தான் நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள் மற்றும் அவருடைய பெற்றோர் வாழ்ந்த ஊராகும். அவர்கள் வழிவந்த ரஜினியின் உறவினர்கள் பலரும் இந்த கிராமத்தில் தற்போதும் வசித்து வருகின்றனர் . ரஜினி அவர்கள் திரைத்துறையில் பிசியாக இருந்தாலும் அவரின் அண்ணன் சத்யநாராயண ராவ் நாச்சி குப்பத்தில் நடைபெறும் உறவினர்கள் நடத்தும் விழாக்களில் பங்கேற்கத் தவறுவதில்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் மூதாதையரின் கிராமமான இங்கு பெற்றோரின் நினைவகம் அமைக்க 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கி அடிக்கல்லும் நாட்டப்பட்டது. மேலும் நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு பெயர் பலகை , விளக்குகளும் வைக்கப்பட்டது .அது மட்டுமின்றி ரஜினியின் சார்பில் ரசிகர்கள் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் புதிய பட ரிலீஸ் உதவிகள் போன்றவைகளை நடத்தி வந்தனர் .
ரஜினியின் அண்ணன்தான் இந்த நிலத்தை நேரடியாக பராமரித்து வந்தார் அங்கு அவர்கள் பெற்றோர்களின் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டதுடன் அந்த பகுதி கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது .சமீபத்தில் ஜெயிலர் படம் வந்த பின் ரஜினிகாந்த் ஆன்மீகயாத்திரை மேற்கொண்டு சென்னை திரும்பியதை அறிவோம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்று தான் படித்த பள்ளி மற்றும் பணிபுரிந்த பணிமனை போன்ற இடங்களுக்கு சென்று பார்த்தார்.
பின் நேற்று பெங்களூருவில் இருந்து காரில் கிளம்பிய ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரான நாச்சிக்குப்பத்திற்கு முதல்முறையாக சென்றார். காலை 11:30 மணி அளவில் அங்கு வந்த ரஜினிகாந்த் தன் பெற்றோரின் நினைவகத்தில் உள்ள சிலைகளுக்கும், சாமி சிலைகளுக்கும் மாலைகள் அணிவித்து வழிபட்டார் .
தொடர்ந்து நினைவகத்தை சுற்றிப் பார்த்த ரஜினிகாந்த் அங்கிருந்த தனது உறவினர்கள் மற்றும் பணிபுரிந்து வந்த பலரிடம் நலம் விசாரித்தார் மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சுமார் 20 நிமிடம் அங்கு இருந்த ரஜினிகாந்த் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் வந்த தகவல் கேட்டதும் அங்கு சென்ற ஏராளமான ரசிகர்கள் அவர் சென்று விட்டதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.