இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை அணியின் உரிமத்தை வாங்கியுள்ளதாக நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா அவ்வபோது தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்து வருவார். சமூகத்தில் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வரும் அவர், அகரம் பவுண்டேஷன் மூலமாக குழந்தைகள், மாணவரகளுக்கும் உதவி வருகிறார். இந்த நிலையில் விளையாட்டு துறையிலும் கால் பதித்துள்ளார்.
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஐஎஸ்பிஎல் டி10 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தொடரின் அனைத்து ஆட்டங்களும் கிரிக்கெட் மைதானங்களில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளார்கள் 6 பேர் இருக்கலாம்.
ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் உரிமத்தை வாங்கியுள்ளதாக நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.