மார்க் ஆண்டனி திரைப்படம்  
வெள்ளித்திரை

மார்க் ஆண்டனி திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல்!

விஜி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் திட்டமிட்டபடி 15ஆம் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு, செலுத்தியது.அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது.

மேலும், கடந்த 2022ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வில்லை எனவும், அப்போது தன்னிடம் எந்த நிதி ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த விஷால், அன்றைய தினம் மினி ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர் வினோத் குமாரிடம் இருந்து 1 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளதாகவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

SCROLL FOR NEXT