2000 மாவது ஆண்டில் ஏழையின் சிரிப்பில் என்ற படத்தில் இடம் பெறும் " கரு கரு கருப்பாயி எனத் தொடங்கும் பாடல் மிகவும் பிரபாலாமானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் இதே பாடல் இடம் பெற்றது. தற்சமயம் கரு கரு கருப்பாயி பாடல் பலரால் வலைதளங்களில் விரும்பி கேட்கும் பாடலாக உள்ளது.
இப்பாடலில் வசீகர பெண் குரலுக்கு சொந்தகாரர் அனுராதா ஸ்ரீ ராம் அவர்கள். அனுராதா ஸ்ரீராமின் தாயார் அவர்களும் பின்னணி பாடகியாக இருந்ததால் சிறு வயது முதல் இசையுடன் வளர்ந்தார் அனுராதா. தஞ்சை கல்யாண ராமன் மற்றும் பிருந்தா போன்றவர்களிடம் முறைப்படி கர்நாடக இசை கற்றுக்கொண்டு பனிரெண்டு வயது முதல் மேடை கச்சேரி செய்ய தொடங்கினார்.
ரஜினியின் காளி படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார்.1990களின் தொடக்கத்தில் ஏ. ஆர் ரஹ்மான் தனது இசையை மக்களிடம் கொண்டு சேர்க்க நல்ல குரல் வளமும் இசை ஞானமும் கொண்ட பாடகர்களை தேடிக் கொண்டிருந்தார் .1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தில் மலரோடு என தொடங்கும் பாடல் பாட அனுராதா ஸ்ரீராமிறக்கு வாய்ப்பு தந்தார் ரஹ்மான். இதற்கு முன்பு சில பாடல்கள் அனுராதா பாடியிருந்தாலும் மலரோடு பாடல் யார் இந்த பாடகி என்று மக்களை கேட்க வைத்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில்" நலம் நலமறிய ஆவல்",''உன் உதட்டோர சிவப்பே" என தனது குரலால் தமிழக மக்களின் மனதில் நுழைந்து விட்டார் அனுராதா. நலம் நலமறிய ஆவல் பாட்டில் காதல் ஏக்கம், கரு கரு கருப்பாயி பாடலில் துள்ளல் இப்படி பல எமோஷனல்களை குரலில் காட்டுவதுதான் அனுராதா அவர்களின் வெற்றி. வெற்றிக் கொடி கட்டு பாடலில் இடம் பெறும் " கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு "பாடல் தமிழ்நாட்டில் ஒலிக்காத கிரமங்களே இல்லை என்றே சொல்லலாம்.
எண்ணிலடங்கா திரைப் பாடல்கள் பல்வேறு மேடைகள் என்று அனுராதா ஸ்ரீராம் வலம் வந்தாலும் தனது தேடலை நிறுத்தவில்லை. பண்டிட் மணிக் தாகூர்தாஸ் என்பவரிடம் ஹிந்துஸ்தானி இசையும், ஷீர்லி மீயர் என்பவரிடம் மேற்கத்திய இசையையும் கற்று கொண்டார். இந்த இசை வடிவங்களில் மேடை நிகழ்ச்சியும் நடத்துகிறார். சென்னை பல்கலையில் இசையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சிங்களம் போன்ற பல மொழிகளில் பாடும் திறமை பெற்ற அனுராதா ஸ்ரீ ராம் சென்னை பொண்ணு, சவாரியா உட்பட பல்வேறு இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
திரை பாடல்கள், ஆல்பம், மேடை நிகழ்ச்சிகள் என பலவேறு திறமை கொண்ட பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். குரல் வளத்தால் பன்முக திறமை கொண்ட அனுராதா ஸ்ரீ ராம் அவர்களின் வெற்றிக்கு கடின உழைப்பு என்றால் அது மிகையல்ல.