அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது. ஒருவழியாக இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அயலான் படத்தின் தெலுங்கு வெர்ஷனை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவில்லை என தில் ராஜு அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இதனால், அயலான் படத்திற்கான வெளியீட்டு உரிமையை புகழ்பெற்ற தெலுங்கு பட தயாரிப்பாளரான தில் ராஜு வாங்கி இருந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஹனுமன் படத்தை நான் தடுக்கவில்லை. என்னை எதற்காக டார்ஜெட் செய்கிறார்கள் என தெரியவில்லை. மன உளைச்சலாக உள்ளது என கூறி உள்ளார். இதன்மூலம் அயலான் படம் தெலுங்கில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகி உள்ளது.