'நான் பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது' என 'உயிரே' ('தில் சே') படத்தில் அமரர் சுஜாதா வசனம் ஒன்று வரும். அதுபோல எத்தனை பேருக்கு தன் இறப்பின் கடைசி தருணத்தை உணர முடிந்திருக்கிறது?இந்த உலகத்தை விட்டுப்போகும் முன் எத்தனை பேரால் நிறைந்த மனதுடன் குட் பை சொல்லிப்போக முடிந்திருக்கிறது? நம் பெற்றோரின் இறப்பிற்கு முன் அவர்களுடன் நாம் பேசிய கடைசி தருணங்கள் என்ன? நாம் அவர்களுடன் நேரம் செலவிட்டிருக்கிறோமா? இவற்றை எல்லாம் அலசும் படம் தான் GOODBYE.
திருமண கொண்டாட்டங்களுக்கு இடையே முழுக்க முழுக்க ஜாலியாக பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 'ஹம் ஆப் கே ஹைங் கோன்' (1994) என்ற ஹிந்திப்படம் முழுக்க முழுக்க திருமண ஏற்பாடுகள் இடையே நிகழும் ஒரு கதை. தமிழில் ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யராஜ் - குஷ்பூ நடித்த கல்யாண கலாட்டா (1998) முழுக்க முழுக்க ஒரு திருமண மண்டபத்தில் நிகழும் க்ரைம் த்ரில்லர் கதை.
ஆனால் ஒரு இழவு வீடு அல்லது ஒரு இறப்பு நடந்த வீட்டில் முழுக்க முழுக்க அவர்கள் ஈமக்க்ரியை, சடங்கு சம்பிரதாயங்கள் பற்றியே பல சுவராஸ்யமான சம்பவங்களுடன் படம் வந்திருக்கிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும்.
நாயகி தன் ஆஃபீசில் நிகழ்த்திய ஒரு சாதனைக்கான பார்ட்டி கொண்டாட்டத்தில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். அவரது செல் ஃபோன் பேட்டரி டவுன் , சார்ஜ் போடச்சொல்லி அங்கே இருக்கும் பணியாளிடம் தந்து விட்டு தன் நடனத்தை தொடர்கிறார். பின் ஃபோனை மறந்து வீட்டுக்கு வந்து விடுகிறார். மறுநாள் காலை அவரது ஃபோன் கிடைக்கிறது. அவரது அப்பா நைட் பூரா கால் பண்ணி இருக்கார். அம்மா இறந்துட்டாங்க என்ற தகவலை சொல்ல.
பதறிப்போன நாயகி அப்பா வீட்டுக்கு அம்மாவைப் பார்க்கப்போகிறாள். அவரது சகோதரர்கள் வருகிறார்கள் . உறவினர்களும் வருகிறார்கள் . ஒவ்வொருவரும் இறந்து போன அம்மாவுடனான தன் அழகிய தருணங்களை நினைத்துப்பார்க்கின்றனர் பிறகு காசியில் கங்கை நதியில் அஸ்தியை கரைக்க செல்கின்றனர். அங்கே நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.
நாயகனாக அப்பாவாக அமிதாப் பச்சன். என்னதான் சூப்பர் ஸ்டாராக ஆக்சன் அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் இது போன்ற கேரக்டர் ரோலில் அவரைப்பார்க்க மனசுக்கு இதமாக இருக்கிறது. மனைவியுடனான காதல் தருணங்கள், பட்டம் விட்டு தூது விட்டது போன்ற டீன் ஏஜ் சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் இடங்கள் கவிதை. அந்தக்காட்சிகளை கார்ட்டூன் வடிவில் காட்சிப்படுத்தியதும் அழகு.
அம்மாவாக காயத்ரி ரோலில் நீனா குப்தா. 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் பிணமாக வாழ்ந்திருந்தார். அதுபோல படம் முழுக்க பிணமாக வந்தாலும் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக் காட்சிகளில் உயிருடன் வந்து திரைக்கதைக்கு உயிர் ஊட்டுகிறார். இவரது ஆக்கிரமிப்புதான் முழுப்படத்திலும், நிறைவான நடிப்பு.
மகளாக ராஷ்மிகா மந்தனா, ஏற்கனவே சுல்தான், புஷ்பா ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அழகிய முகம் , கண்ணிய உடை, கச்சிதமான நடிப்பு அப்பாவுடனான வாக்குவாத காட்சிகளில் , பண்டிட் உடன் நடத்தும் விவாதங்களில் ஜொலிக்கிறார்.
இவர்கள் நீங்கலாக ஃபாரீனிலிருந்து வரும் மகன்கள், வளர்ப்பு மகன், மருமகள் என அனைத்து கேரக்டர்களுமே தங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இறப்பு வீட்டுக்கு வரும் உறவினர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் அவர்களது எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை காமெடி கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. பின் பாதியில் திரைக்கதை காசிக்கு பயணிக்கும்போது இறந்தவருக்கு செய்யும் ஈமச்சடங்குகள் பற்றிய விவாதங்கள், பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சொன்னதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
சாவு வீட்டில் எல்லாரும் சோகமாக இருக்க நான்கு பெண்கள் இறந்து போன அம்மாவின் பெயரில் ஒரு வாட்சப் க்ரூப் ஆரம்பித்து அங்கேயே ஒரு செல்ஃபி எடுத்து அதை வாட்சப் டிபி ஆக வைப்பது ரசிக்க வைக்கிறது.
ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவரான விகாஸ் பால் தான் இயக்கி இருகிறார். எல்லோருக்கும் ஒரு இழப்பு இருக்கும் என்பதால் நடுத்தர வயதுள்ள எல்லோராலும் இந்தக் கதையை எளிதில் கனெக்ட் பண்ணிக்கொள்ள முடியும்.
சுதாகர் ரெட்டியின் ஒளிப்பதிவு காசியின் அழகை கண் முன் நிறுத்துகிறது. அமித் த்ரிவேதியின் இசையில் சோக மெலோடி சாங்க்ஸ் அதிகம். பிஜிஎம் கச்சிதம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் ரெண்டரை மணி நேரத்தில் ஒரு ஃபீல் குட் மூவியைப்பார்த்த திருப்தி.
தற்போது இந்தப்படம் நெட் ஃபிளிக்சில் வெளியாகி உள்ளது.