Vadivelu Birthday 
வெள்ளித்திரை

HBD வடிவேலு - மீண்டும் 'மாமன்னனாக' வலம் வருவாரா வடிவேலு?

'வைகைப் புயல்' வடிவேலு பிறந்த நாள்!

ராகவ்குமார்

‘ஆஹா... இவன் அவன்ல, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா. இவன் ரொம்ப நல்லவன்டா, வேணாம் வலிக்குது அழுதுருவேன்’ இப்படி நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல காமெடி வசனங்களுக்கு சொந்தக்காரரான நகைச்சுவை மன்னன் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று செப்டம்பர் 12.

1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 அன்று  மதுரையில் பிறந்த வடிவேலு தற்போது 65 வயதில் அடி எடுத்து வைக்கிறார். நகைச்சுவை நடிகர்களை பொறுத்தவரையில் சில நடிகர்கள் வசனங்கள் வழியாக மக்களை சிரிக்க வைப்பார்கள். இன்னும் சிலர் தங்களது உடல் மொழி வழியாக மக்களை மகிழ்விப்பார்கள். உடல் மொழி, வசனம் இரண்டின் வழியேயும்  நகைச்சுவை செய்பவர்கள் மிகச் சில நடிகர்களே. மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் இந்த இரண்டையும் ஒருசேர திரையில் நிகழ்த்துவத்தில் கைவரப் பெற்றவர். நாகேஷுக்கு பிறகு உடல் மொழி, வசனம் இரண்டிலும் மக்களைக் கவர்ந்தவர் நம் ‘வைகைப் புயல்’ வடிவேலுதான்.

கடந்த 1993ம் ஆண்டு, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா வடிவேலுவை 'கருப்பு நாகேஷ்' என்றழைத்தார். ‘வைகை புயல்’ என்ற பட்டத்தைப் பெறுவதற்கு முன்பே வடிவேலு, ' கருப்பு நாகேஷ்' என்ற பட்டத்தை பெற்று விட்டார். கலைஞர்களை மிக அதிக அளவில் கொண்டாடும்  நகரம் மதுரை.  இந்த நகரின் சூழ்நிலை வடிவேலுவை கலைத்துறையில் நுழையும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. வருடம் முழுவதும் கோயில்  திருவிழாக்கள் கொண்டாடப்படும் மாமதுரையில், இதுபோன்ற விழாவின்போது மேடை நாடகங்களும் தவறாமல் இடம்பெறும். இந்த நாடகங்களில், குறிப்பாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார் வடிவேலு. நண்பர்கள் 'சினிமாவில் நடிக்கலாமே' என்று உசுப்பேத்தி விட,  சென்னைக்கு வந்தார் வடிவேலு.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1988ல் T.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த, ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் நடிக்க சிறு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் மதுரைக்கு வந்து தனது குடும்ப வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். மீண்டும் ஒரு முறை சினிமா கனவு எட்டிப் பார்க்க சென்னை வந்த வடிவேலுவுக்கு , 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆரம்ப கால படத்திலேயே பாடல்களுக்கு நடுவில் வசனம் பேசும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. வடிவேலு இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு’ என்ற பாடலும் பாடலுக்கு நடுவில் இடம் பெறும் வடிவேலுவின் வசனமும் அந்நாளில் மிகப் பிரபலமானது. ‘யாரப்பா இந்தப் பையன். நம்ம ஊர் பையன் மாதிரி இருக்கானே’ என ரசிகர்கள் வடிவேலுவை உற்றுநோக்க ஆரம்பித்தார்கள். ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் அறிமுகமானாலும், வடிவேலு நடித்த முதல் படம் என பலர் எண்ணுவது ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தைத்தான்.

எப்போதும் நல்ல திறமையானவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு தரும் கமல்ஹாசன், வடிவேலுவுக்கு ‘தேவர் மகன்’ படத்தில் ‘இசக்கி’ என்ற கதாபாத்திரத்தை வழங்கி நடிக்க வைத்தார். ‘ஒரு பக்கம் சிங்கம் (சிவாஜிகணேசன்), இன்னொரு பக்கம் புலி (கமல்) இரண்டுக்கும் நடுவுல நடிக்கிறதுக்கு பயமா இருந்தது’ என இன்று  வரை வடிவேலு தேவர் மகனை நினைவு கூறுவார். தான் ‘மாமன்னன்’ படத்தை இயக்குவதற்கு தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டரின் பாதிப்பு தான் என மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். அந்த அளவுக்கு தேவர் மகனில் வடிவேலு நடிப்பின் பாதிப்பு இருந்தது.

கவுண்டமணி, செந்திலுடன் சேர்ந்து நடித்துக்  கொண்டிருந்தவர், 1994ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படம் முதல் தனியாவர்தனம் செய்ய  ஆரம்பித்தார். 1993ல்  ஷங்கர் இயக்கிய ‘ஜெண்டில்மேன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில் இருந்தார்கள். இருந்தாலும் காதலனுக்காக ஷங்கர் வடிவேலுவை தேடிப் போனார். இதைப்போல் பல இயக்குநர்கள் கவுண்டமணி, செந்திலை விட்டு நீங்கி வடிவேலுவுக்கு தாவ ஆரம்பித்தார்கள். கிராமிய கதைக்களம் கொண்ட கதையை இயக்க எண்ணும் இயக்குநர்களுக்கு முதல் தேர்வாக வடிவேலு இருந்தார். ஷங்கர், சேரன் என வளர்ந்து வரும் பல இயக்குநர்கள் படங்களில் வடிவேலு தவறாமல் இடம் பிடித்தார். பல வளரும் இயக்குநர்கள் வடிவேலுவை தாங்கள் நினைத்தபடி பயன்படுத்திக் கொண்டார்கள். வடிவேலு இருந்தாலே போதும் உடனே ஏரியா விற்று விடும் என்ற அளவிற்கு வடிவேலுவின் தாக்கம் சினிமாவில் 1998 முதல் 2011 வரை இருந்தது. வெற்றிக் கொடிகட்டு, தலைநகரம், வின்னர், சந்திரமுகி இப்படி பல படங்களின் வெற்றியில் வடிவேலுவின் நகைசுவை பங்களிப்பு இருக்கிறது. பிறகு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்.

கலைஞர்களின் வளர்ச்சியில் ஒரு தடைக்கல் ஏற்படுவது வாடிக்கை. வடிவேலு விஷயத்தில் இந்தத் தடைக்கல்லின் பெயர், ‘அரசியல்.' 2011ம் ஆண்டு அப்போது ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. கழகத்தினரின் ஆதிக்கம் அப்போது அதிகம் சினிமாவில் இருந்தது. அப்போது புதிதாக கட்சி  ஆரம்பித்த விஜயகாந்தை எதிர்கொள்ள வடிவேலுவை பயன்படுத்தியது திராவிட முன்னேற்ற கழகம். வடிவேலுவும் விஜயகாந்த் மீது தனி மனித தாக்குதல் நடத்தினார். ஆனால்,  விஜயகாந்த் ஒரு இடத்தில கூட வடிவேலுவை பற்றி எதுவுமே பேசவில்லை. சின்ன கவுண்டர், கோவில்  காளை போன்ற படங்களில் தன்னுடன் நடிக்க வடிவேலுவை சிபாரிசு செய்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வந்தால் செய்த உதவி கூட மறந்து போகும் என்பதற்கு சிறந்த உதாரணமாகிப் போனார் வடிவேலு. (இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், விஜயகாந்த், வடிவேலு இருவரும் மதுரை மண்ணில் இருந்து வந்தவர்கள். சென்னையில் கூட சாலிகிராமம் பகுதியில்தான் இருவரின் இல்லமும் உள்ளது.) 2011ல் ஆரம்பித்த இந்த மோதல் கடந்த ஆண்டு விஜயகாந்த் இறப்பு வரை நீடித்தது. விஜயகாந்த் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த வடிவேலு  வராதது வடிவேலு மீது ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியது. ஒரு சினிமாகாரராக வடிவேலு ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கக் கூடாது என்று வருந்தியவர்கள் பலர். தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பாலும், வடிவேலுவுக்கு வாய்ப்பு தந்தால் அம்மையாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தாலும் தயாரிப்பளார்கள் பலரும் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர தயங்கினர். தொடர்ந்து வடிவேலுவுக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

அதையடுத்து, சந்தானம், சூரி, சதீஷ், யோகிபாபு என பலரும் திரையுலகிற்கு வர ஆரம்பித்து விட்டார்கள். வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்தாலும், நமது சமூக வலைத்தளங்களில் நுழைந்து விட்டார் வடிவேலு. கடந்த பத்தாண்டுகளாக வடிவேலு வசனங்கள் அதிக அளவில் மீம்ஸ்களாகவும், ரீல்ஸ் கிரியேட்டர்களாகவும் வந்து கொண்டிருக்கின்றன. குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வடிவேலு படத்தின் மீம்ஸ்களை நாம் தொலைபேசியில் பார்த்து விடுகிறோம்.

கடந்த 2023ம் ஆண்டில் ‘மாமன்னன்’  படத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக கம்பேக் தந்தார் வடிவேலு. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வடிவேலு  கதை கேட்டு கொண்டிருப்பதாகச் சொல்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். இது உண்மையாகட்டும். மீண்டும் ஒரு மாமன்னனாக வடிவேலுவை காண இந்த பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம். சமீப காலத்தில் நடிகர்களில் தனது  செயல்பாட்டிற்காக  அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது வடிவேலுதான். இருந்தாலும்  நமது மனக் கவலைகளுக்கு வடிவேலுவின் நகைச்சுவை ஒரு மருந்தாக இருக்கிறது. ‘வைகைப் புயல்’ மீண்டும் ஒரு கம் பேக் தர இந்த பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT