நாயகன்: 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெற்றி பெற்ற ‘நாயகன்’ படத்தில் இடம் பெறும் 'அந்தி மலை மேகம்' பாடலில் இடம்பெற்ற ஹோலி கொண்டாட்டக் காட்சிதான் தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் பிரம்மாண்ட ஹோலி காட்சி எனச் சொல்லாம். உழைக்கும் பாட்டாளி மக்களின் ஹோலி கொண்டாட்டத்தைக் கண்முன் கொண்டு வந்திருப்பார் மணிரத்னம். இளையராஜா பாட்டில் ஒரு ராஜங்கமே நடத்தி இருப்பார். இந்தப் பாடல் இன்றுவரை சிறந்த ஹோலி பாடலாகவும் ஆண்டுகள் பல கடந்தும் பல ஆயிரம் ரசிகர்களால் விரும்பப்படும் பாடலாகவும் உள்ளது.
ராசுக்குட்டி: 1992ஆம் ஆண்டு பாக்கியராஜ், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான ‘ராசுக்குட்டி’ படத்தில் இடம்பெறும் ‘ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி’ பாடல் நினைவிருக்கிறதா? முழு நீள நகைச்சுவைப் படமாக இருப்பதால் ஹோலி பாடலுக்கு பாக்கியராஜ் ஆடும் நடனமும் சற்று 'நகைச்சுவை'யாக இருக்கும்.
ப்ரியங்கா: 1994ல் ஜெயராம், ரேவதி நடிப்பில் வெளிவந்த ‘பிரியங்கா’ படத்தில் இடம்பெறும் ‘வெட்டுக்கிளி வெட்டி வந்த’ எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறும் நடனத்தில் ஹோலி நடனம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பப்லுவும், சில்க் ஸ்மிதாவும் தங்களது நடனத்தில் ஒரு லைவ் ஹோலி கொண்டாட்டத்தைக் கண்முன் காட்டியிருப்பார்கள். பண்பலை வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல் பலரும் ரசிக்கும் பாடலாக உள்ளது. நம்ம ராஜா சார்தான் இப்படத்திற்கும் இசை அமைதிருப்பார். இந்தப் பாடலf வெற்றி பெற்ற அளவிற்குப் படம் வெற்றி பெறவில்லை.
ஆரம்பம்: அஜித், நயன்தாரா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ஆரம்பம் படத்தில் 'மேலால வெடிக்குது' பாடல் ஒரு முழு நீள ஹோலி கொண்டாட்டப் பாடல். ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு ஹோலி நடனத்திற்காக அதிக அளவு ரசிக்கப்பட்ட நடனம் 'மேலால வெடிக்குது'. அஜித்-நயன்தாரா குழுவினருடன் ஆடும் நடனத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார்.
மெர்சல்: ‘ஆளப்போறன் தமிழன்’ என்ற பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும் பாடல். இடம்பெற்ற படம் மெர்சல். படம் வெளியான ஆண்டு 2017. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் அமைந்த இப்பாடலின் நடனம் தமிழனின் பெருமைகளையும், வீர விளையாட்டுகளையும் காட்சிப்படுத்தும். நடுவில் ஹோலி கொண்டாட்டமும் இடம் பெறும். தமிழனின் பெருமைகளை நடனத்தின் வாயிலாக ஒரு வட இந்திய கலாச்சாரத்துடன் இணைத்தது சபாஷ் போட வைத்தது.
காலா: ரஜினி நடித்த ‘காலா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 'கற்றவை பெற்றவை' என்ற பாடலில் ஒரு மாறுபட்ட ஹோலி காட்சியை எடுத்திருப்பார் பா. ரஞ்சித். ஹோலி என்ற விஷயத்தை ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படங்களில் காண்பிப்பார்கள். பா. ரஞ்சித், வில்லனை வீழ்த்தவும் வீரத்தின் வெளிப்பாடாகவும் ஹோலியைப் பயன்படுத்தி இருப்பார். வண்ணப் பொடிகளுக்குப் பதிலாக கருப்பு நிறப் பொடிகளே பிரதானமாக இருக்கும். ‘காலா’ 2018ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியான சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராடியவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார் ரஜினி. இதனால் கோபமடைந்த மக்கள் ‘காலா’ படத்தைப்ற புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.