இயக்குனர் சந்து மான்டெட்டி இயக்கும் அடுத்த படத்தில் நாக சைதன்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'கார்த்திகேயா 2' படத்தை இயக்கியவர்தான் இயக்குநர் சந்து மான்டெட்டி. இவர், ஏற்கெனவே நாக சைதன்யா நடிப்பில் 'பிரேமம்', 'சவ்யசாச்சி' படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக சந்து மான்டெட்டியுடன் நாக சைதன்யா இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யா ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநதி' படத்தில் ANR என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இதையடுத்து, தற்போது இந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், இதுமட்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து நடிக்கும் முதல் முழு நீள படமாக இது அமையும். இருப்பினும் இச்செய்தி உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.