இந்த வாரம் ஊர்வசி நடிப்பில், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான J.பேபி திரைப்படம் ரசிகர்களிடையேயே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற இத்தருணத்தில், இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரியிடம் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காகப் பேசினோம்:
இப்படத்தில் கொஞ்சம் குழந்தைத்தன்மை கொண்டவராகவும் மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், பேபி கேரக்டரை உருவாக்கியதன் பின்னணி?
என் பெரியம்மாவை பார்த்துதான் இந்தக் கதாபாத்திரம் உருவானது. பெரியம்மாவின் உண்மை பெயர் அன்னபூரணி. அவர் சிறுகுழந்தையாக இருக்கும்போது வெள்ளைக்காரர்கள் பேபி என்று கொஞ்சியதால் பேபி என்று அழைக்கப்பட்டார். பெரியப்பாவின் பெயர் ஜானகிராமன் என்று இருந்ததால் J.பேபி என்று ஆனார்.
இந்தப் படத்தில் பேபிக்கு காட்டும் மனநிலை பாதிப்புகள் யதார்த்தத்தைத் தாண்டி உள்ளதே?
இது முற்றிலும் என் பெரியம்மாவுக்கு ஏற்பட்ட பாதிப்புதான். கணவர் இறந்தது, மகனின் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள், சொந்த வீட்டை விற்றது... இப்படி பல காரணங்களால் பெரியம்மா மன சிதைவு நோய்க்கு ஆளானார். இதனால் வீம்பு சண்டைக்குப் போவது, திறந்திருக்கும் வீட்டைப் பூட்டு போடுவது என பல மாறுபட்ட செயல்களைச் செய்தார். சொல்லாமல் ரயில் ஏறி கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டார். இதைதான் அப்படியே என் படத்தில் வைத்தேன். மிகைப்படுத்தல் எதுவும் இல்லை.
ஊர்வசியை பேபி ஆக்கியது ஏன்?
இப்படத்திற்கான கதையை யோசிக்கும்போதே ஊர்வசி மனதிற்குள் வந்துவிட்டார். இந்தக் கதையை ஊர்வசி அவர்களிடம் சொல்லும்போது இரண்டு பெரிய பசங்களுக்கு அம்மா, வித்தியாசமான கேரக்டர் என முதலில் சற்று தயங்கினாலும், என் ஸ்கிரிப்ட்டின்மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக்கொண்டார். நான் சரியாக யோசித்திருக்கிறேன் என்பதை படம் பார்த்தபின்பு புரிந்துகொண்டார். இந்தப் படத்தை பார்த்த என் பெரியம்மாவின் குடும்பத்தினரும் என் பெரியம்மாவை நேரில் பார்த்ததுபோல உள்ளது என்று கூறினார்கள். இதுவே என் படத்திற்கு கிடைத்த வெற்றி என நினைக்கிறேன்.
லொள்ளு சபா மாறனை சீரியஸ் மாறனாக மாற்றும் ஐடியா எப்படி வந்தது?
மாறனின் உடல் மொழி ரியல் பேபியின் மகனின் உடல் மொழியுடன் ஒத்துபோனது. எனவே, மாறனை இந்த ரோலில் நடிக்க வைத்தேன். மேலும், மாறன் காமெடி தாண்டி, நன்றாக நடிக்கும் திறமை பெற்றவர்.
பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எல்லாம் ஜாதியப் பாகுபாட்டைச் சொல்லும் படங்கள் என்ற கருத்து உள்ளது. இக்கருத்தை மாற்றவே பெண்களை மையமாக வைத்து படம் எடுத்தீர்களா?
நீங்கள் சொல்வதுபோல நீலம் தயாரிப்பு நிறுவனம் பற்றி தமிழக மக்களிடம் கருத்து இருப்பது உண்மைதான். மக்களிடம் நல்ல படங்களைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் டைரக்டர் பா.ரஞ்சித் அவர்களின் நோக்கம். இதற்கான பணியைதான் நீலம் நிறுவனம் செய்கிறது. நீலம் நிறுவனம் சமூக பிரச்னையை மட்டும்தான் பேசும் என்று இருந்த பார்வையை என் படம் மாற்றியுள்ளது என்றால், அது எனக்கு பெருமையே.
உங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்களை வைத்து முதல் படம் தந்துவிட்டீர்கள். உங்களின் அடுத்த படம் எப்படி இருக்கும்?
நல்ல கருத்துள்ள ஜனரஞ்சக படம் தருவதுதான் என் நோக்கம். என் அடுத்த படமும் இதைப்போன்ற ஜனரஞ்சகமான படமாகத்தான் இருக்கும்
உங்களைப் போன்ற இளம் இயக்குனர்கள் சிறப்பாக படம் தந்தாலும் நம் தமிழ்நாட்டில் பிற மொழி படங்கள் வசூலை வாரி குவிக்கின்றனவே ?
நீங்கள் குறிப்பிடுவதுபோல், மஞ்சுமல் பாய்ஸ் போன்ற பல படங்கள் பெரிய வெற்றி அடைந்துள்ளது உண்மைதான். இதுபோன்ற மாற்று மொழி படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். எந்தப் படம் வெற்றி பெற்றாலும் சினிமா துறைக்கு நல்லதுதானே.
J. பேபி படம் வெளியாகி இந்த நான்கு நாட்களில் பரவலான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த வார இறுதியில் இன்னும் பாசிட்டிவான ரிசல்ட் வரும் என எதிர்பார்க்கிறேன்.