நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழக தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் இப்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். இதனையடுத்து உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உதகை மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகளை நடத்த தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் கோடை சீசனை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாலும், உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் நாளை முதல் ஜீன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
–இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.