லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து இன்றோடு இருபது வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.
டயானா மரியம் குரியன் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்ட நயன்தாரா 1984ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பெங்களூரில் பிறந்தார்.
நயன்தாராவின் தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால் இவர் குஜராத்தில் தான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின் கேரளாவில் தன் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரி படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுப்பட்ட நயன்தாரா 2003ம் ஆண்டு கேரளாவில் சிறந்த மாடலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அதே 2003ம் ஆண்டு நயன்தாரா ‘மனசினக்கரே’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். இப்படத்தின் இயக்குனர் சத்யன் அன்திக்கட். நயன்தாராவிற்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்றும் இப்படத்தில் நடிக்க வரமாட்டேன் என்றும் பின், இயக்குனர் கட்டாயப்படுத்தியதால் நடித்தேன் இதுதான் முதல் மற்றும் கடைசி படம் என்றும் நயன்தாரா கூறியதாக 'மனசினக்கரே' படத்தின் இயக்குனர் கூறினார். ஆனால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை ஈட்டியதால் நயன்தாரா தன் முடிவை மாற்றிக்கொண்டார். 2004ம் ஆண்டே 'விஸ்மயதும்பது' மற்றும் 'நாட்டுராஜாவு' என்ற இரண்டு மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்தார்.
2005ம் ஆண்டு முதல் நயன்தாராவின் தமிழ் சினிமா பயணம் தொடங்கியது. நயன்தாரா முதன்முதலில் 'ஐயா' என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் கேமியோ ரோல் செய்திருப்பார். மேலும் தஸ்கர வீரன், ராப்பகல் ஆகிய மலையாள படங்களிலும் நடித்து அந்த ஆண்டை ஒரு பிஸியான ஆண்டாக மாற்றிக்கொண்டார் நயன்தாரா.
பிறகு 2006ம் ஆண்டு 'லட்சுமி' என்ற படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து 'பாஸ்' என்ற படமும் நடித்தார். மேலும் கள்வனின் காதலி, ஈ, தலைமகன், வல்லவன் போன்ற தமிழ் படங்களில் நடித்தார். இதில் சிம்புடன் இணைந்து நடித்த 'வல்லவன' படம் நயனின் கெரியரைத் தூக்கிவிட்ட ஒரு படமாக இருந்தது.
2007ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார் நயன்தாரா. யோகி, துபாய் சீனு, துளசி ஆகிய தெலுங்குப் படங்களிலும் சிவாஜியில் ஒரு கேமியோ ரோல் மற்றும் அஜித்திற்கு ஜோடியாக 'பில்லா' என்ற படமும் நடித்தார்.
பின்னர் 2008ம் ஆண்டு 'யாரடி நீ மோகினி' என்ற படத்தின் மூலம் யாரும் தொடமுடியாத ஒரு இடத்திற்கு சென்றார் நயன்தாரா. சத்யம், ஏகன், வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், நானும் ரவுடிதான் எனத் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தார் நயன்தாரா.
மேலும் நயன்தாரா அறம், கோலமாவு கோகிலா, அனாமிக்கா, நெற்றிக்கண், அன்னபூரணி போன்ற பெண்களுக்கான கதைக்களம் கொண்ட படங்களிலும் நடித்து பெரிய ஹிட் கொடுத்தார்.
2015ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடிதான்' என்ற படத்தின் மூலம் அவரது காதல் வாழ்க்கைத் தொடங்கியது. ஆம்! அந்த படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து 2022ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டார்கள். பின்னர் அவர்களுக்கு அக்டோபர் மாதம் வாடகைத்தாய் மூலம் உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்ச்சர் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி கூழாங்கல், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகியப் படங்களை இயக்கியுள்ளனர்.
நயன்தாரா பேரிடர் காலங்களில் நன்கொடைகள் அளித்து சமூக நலன் மீதும் அக்கறைக் கொண்டவராக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு தமிழகத்தில் புயல் வந்தபோது 5 லட்சம் நன்கொடை அளித்தார். அதேபோல் கோவிட் காலத்தில் 20 லட்சம் என பல்வேறு நன்கொடைகளை அளித்துள்ளார் நயன்தாரா.
மேலும் நயன்தாரா 2021ம் ஆண்டு ஒரு லிப் பால்ம்(lip balm) கம்பேனி ஒன்றை ஆரம்பித்தார். சமீபத்தில் 9 ஸ்கின் என்ற காஸ்மெட்டிக் கம்பேனி மற்றும் சேனிட்டர் பேட்ஸ் கம்பேனி ஆகியவற்றையும் தொடங்கினார்.
நயன்தாரா கலைமாமணி விருது உட்பட சுமார் 40க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ், தெலுங்கு மற்றும் கேரளா திரையுலகில் வாங்கியுள்ளார்.
நயன்தாரா 2023ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து தனது பாலிவுட் அறிமுகத்தையும் உறுதிப்படுத்தினார். குடும்ப வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் சிறப்பாக வழிநடத்தி வரும் நயன்தாரா பலரது 'Inspiration Dream girl' ஆகவும் இருந்து வருகிறார். இன்று நயன்தாரா சினிமா துறையில் கால் பதித்து 20 வருடங்கள் ஆன நிலையில் நயன்தாரா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.