வெள்ளித்திரை

‘பிச்சைக்காரன்-2’ படத்தை வெளியிடத் தடையில்லை: உயர் நீதிமன்றம் அனுமதி!

கல்கி டெஸ்க்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன். அம்மாவிடம் தமக்குள்ள அன்பை வெளிப்படுத்தும் கதைக் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ என்ற படத்தை எடுத்து முடித்துக் காத்திருக்கிறார்.

இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜகணபதி என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார். அவரது மனுவில், ‘‘தங்களது நிறுவனம் ஏற்கெனவே நடிகர் ஆர்.பாண்டியராஜனை வைத்து, ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தைத் தயாரித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டது, அந்தப் படத்தின் கதையை எங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி தனது நடிப்பில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தை எடுத்து உள்ளனர். எனவே, நஷ்ட ஈடாக எங்களுக்கு பத்து லட்ச ரூபாயை அவர் வழங்க வேண்டும்" என்று கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, "ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தத் தகவலும் தமக்குத் தெரியாது. அந்தப் படத்தை தாம் பார்த்தது கூட இல்லை. வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்தப் படத்தை பார்த்தேன். பிச்சைக்காரன் 2 படத்துக்கும் ஆய்வுக்கூடம் படத்துக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை" என்று அவர் தெரிவித்து இருந்தார்.

அதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதேசமயம், ‘இந்தப் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT