தஞ்சாவூர் பெரிய கோவிலின் பிரம்மாண்டம் குறித்தும், தமிழ் மக்களின் அன்றைய வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் நடிகர் சியான் விக்ரம் பேசியுள்ளார்.
நடிகர் சியான் விக்ரமின் தங்கலான் படம் வெளிவந்து, கதை ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், சியான் விக்ரமின் நடிப்பை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். பலவகையான விசித்திரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர் விக்ரம். இவர் சில நாட்கள் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் எகிப்தியர்களின் பிரமிட் குறித்தும் தஞ்சாவூர் பெரிய கோவில் குறித்தும் பேசியுள்ளார்.
அதாவது, “நாம் எப்போதும் பிரமிட்டை எப்படி கட்டியிருப்பார்கள் என்று யோசிக்கிறோம். ஆனால், இந்தியாவில் ஏராளமான கோவில்கள், பெரிய பெரிய கோபுரங்களுடன் இருக்கின்றன. குறிப்பாக தஞ்சாவூரில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்ட பெரிய கோவிலை பற்றி பேசியே ஆக வேண்டும். அந்தக் கோவிலின் கோபுரமே உலகின் மிகப்பெரிய கோபுரமாகும். மேலே இருக்கும் கல்லானது, அதாவது ஒற்றைப் பெரிய கல்லானது சுமார் 80 டன்கள் எடைக் கொண்டது.
ஒரு டன் இரண்டு டன் அல்ல. 80 டன்கள். அதற்கு நாம் சரிவான சாலையை அமைத்தோம். சுமார் 6 கிமீ பயணித்து மேலே கொண்டுச்சென்று அந்த கல்லை வைத்தோம். இப்போதிருக்கும் எந்த தொழில்நுட்பமும் பயன்படுத்தாமல், வெறும் மாடுகள், யானைகள், மனிதர்களை வைத்து இழுத்துக் கொண்டு செல்லப்பட்டது. அப்படிப்பட்ட இந்தக் கோவில்தான் 6 நிலநடுக்கங்கள் வந்தப்பின்னரும் திடமாக நிற்கிறது. பைசா கோபுரம் சாயத் தொடங்கியது. அதற்கு முன் நின்று நாம் புகைப்படம் எடுக்கிறோம்.
அதுவும் ஒருவித அழகுதான். ஏனெனில், சாய்ந்தும் விழாமல் இருக்கிறது. ஆனால், நம்முடைய கோவில்கள் சாயக்கூட வாய்ப்பே இல்லாத அளவிற்கு கட்டப்பட்டிருக்கின்றன. நினைத்துப் பாருங்கள், அப்போதே நாம் எவ்வளவு முன்னேறி இருந்திருக்கிறோம், எவ்வளவு ஆழமாக சிந்தித்து ஒவ்வொன்றையும் கட்டிருக்கிறோம். உண்மையில் நாம் இதை நினைத்து பெருமைப்பட வேண்டும். “ என்று பேசினார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து பெரியளவு வரவேற்பை பெற்றவர் சியான் விக்ரம். அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில்தான் இதுகுறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.