இயக்குநர் மாரி செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு நமது மங்கையர் மலர் இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், தனக்கு பிடித்த, மறக்க முடியாத பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். தனது அக்கா தன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததையும், அக்கா எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து விட்டத்தையும் சோகத்துடன் அன்று அப்பேட்டியில் பகிர்ந்து கொண்டிருந்தார். மறைந்த தனது அக்காவை நினைவு கொள்ளும் வகையில் இன்று 'வாழை' திரைப் படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்த படத்தை வழங்குகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை போலவே இந்த வாழை படத்திலும் நெல்லை மண்ணை கதை களமாக வைத்துள்ளார் மாரி. இந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் எளிய கூலி வேலை செய்யும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் சிறுவன் சிவனைந்தன். அப்பாவை சிறு வயதிலேயே இழந்தவன். இவனது அம்மாவும், அக்காவும் லாரியில் அருகிலிலுள்ள ஊருக்கு சென்று வாழைத்தார்களை அறுத்து லாரியில் ஏற்றும் பணிகளை செய்து வருகிறார்கள். விடுமுறை நாட்களில் சிவனைந்தனும், இவனது நண்பன் சேகரும் கூட இப்பணிகளை செய்து வருகிறார்கள். ஒரு சனிக்கிழமை விடுமுறை நாளில் அம்மாவை ஏமாற்றி விட்டு, பள்ளிக்கு நடன ஒத்திகைக்கு சென்று விடுகிறான் சிவனைந்தன். அந்த சனிக்கிழமை நாளில் நடக்கும் துயரமான விஷயம் தான் வாழை.
தனது முந்தைய படங்களில் ஜாதி அரசியல் பற்றி பேசிய மாரி செல்வராஜ் வாழையில் கம்யூனிஸ்ட் அரசியலை தொட்டு சென்றிருக்கிறார். பள்ளியில் நடக்கும் சிறு சிறு உரையாடல்கள், ரஜினியா? கமலா? என மாணவர்கள் மத்தியில் நடக்கும் கோஷ்டி சண்டை, திருநெல்வேலியின் பசுமை... என முதல் பாதி முழுவதும் சிரிப்பும், அழகுமாக செல்கிறது. இரண்டாம் பாதி வாழ்க்கைக்கும், யதார்த்தத்திற்கு உள்ள வேறுபாட்டை புரிய வைக்க முயற்சி செய்கிறது.
பூவையும், கொடியையும் வரைந்து எனக்கு பிடித்த டீச்சர் பூங்கொடி என்று சொல்லும் காட்சி, ஒரு விபத்தை படமாக்கிய விதம் என பல இடங்களில் மாரி செல்வராஜ் சபாஷ் போட வைக்கிறார். பரியேறும் பெருமாளில் யோகிபாபு, கர்ணன் படத்தில் பாட்டி போன்ற படங்களில் சிறந்த துணை கதா பாத்திரங்களை உருவாக்கிய மாரி, வாழையில் பூங்கொடி டீச்சராக நிகிலா, நண்பன் சேகராக ரகுவையும் தந்துள்ளார். இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். மாஸ்டர் பொன் வேல் சிவனைந்தன் ரோலை முழுவதுமாக உள் வாங்கி நடித்து நம்மை கை தட்ட வைக்கிறார். அம்மாவாக நடிக்கும் ஜானகி, அக்காவாக நடிக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன் அனைவருமே சரியான தேர்வு.
சந்தோஷ் நாராயணன் இசையில் இறுதியில் இடம் பெறும் ஒப்பாரி பாடல் நமக்கு கண்ணீரை வர வைக்கிறது. 'மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிக்கொடி, 'தூதுவளை இலை அரைச்சு' போன்ற பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பது நம்மை1990 களின் கால கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. விபத்தை தேனி ஈஸ்வர் கருப்பு -வெள்ளையில் காட்டியிருப்பது சிறப்பு.
காதலுக்கு சிறுவனை தூதாக பயன்படுத்துவது போன்ற சில நெகட்டிவ் விஷயங்களும் இருக்கின்றன. படத்தின் இறுதி காட்சி இந்த நெகட்டிவிட்டியை மறக்க செய்து விடுகிறது. ஆடு, மாடுகளை போல் லாரியிலும், டிராக்டரிலும் பயணம் செய்யும் மனிதர்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம்.
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மனித உயிர்கள் எத்தனை மலிவாக மதிக்கப்படுகிறது என்பதை சொல்கிறது வாழை. மனதில் வலியுடன் கூடிய வாழ்வியலை சொல்கிறது வாழை. இப்படம் நாளை (ஆகஸ்ட் 23) அன்று திரைக்கு வருகிறது.