இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இன்னொரு வெற்றிமாறன் என்று நடிகர் தனுஷ் பேச்சு.
நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தனது இரு மகன்களுடன் நடிகர் தனுஷ் பங்கேற்றார்.
மேலும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜீவி பிரகாஷ்இசையமைத்திருக்கிறார். படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியது, நான் திரை உலகத்திற்கு 2002 ஆம் ஆண்டு அறிமுகமானேன். தொடர்ந்து என்னுடைய உழைப்பை உளப்பூர்வமாக செலுத்தி வருகிறேன். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல 2002ஆம் ஆண்டு முதல் நான் சேகரித்த மிகப்பெரிய ரசிகர் கூட்டம், இன்று மிகப்பெரிய வெள்ளமாக மாறியிருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை பொருத்தவரை அசுரத்தனமான உழைப்பை படக் குழுவினர் செலுத்தி இருக்கின்றனர்.
மிக பிரம்மாண்டமாக, சிறப்பாக படம் உருவாகி உள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இன்னொரு வெற்றிமாறன். எனக்கு இவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் தான் ஞாபகம் வருகிறார். இந்த படத்திற்காக என்னை சந்திக்க அவர் வந்தபோது 15 நிமிடத்தில் கதையை கூறினார். அவர் கதையில் என்னவெல்லாம் சொன்னாரோ, அதை அப்படியே சிறப்பாக படமாக எடுத்துக் காட்டி இருக்கிறார் என்று கூறினார்.