தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி கூட்டணியில் உருவாகி இருக்கும் படமான லோக்கல் சரக்கு ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், ’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘லோக்கல் சரக்கு’.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, நாயகியாக உபாசனா ஆர்.சி நடித்திருக்கின்றனர். மேலும், இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.
இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர்.
சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 ரூபாய் வாங்கி குடிக்கிறார். இவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது தங்கை வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே லோக்கல் சரக்கு படத்தின் கதை.
நடன கலைஞரான தினேஷ் ஒரு குடிகாரராக படம் முழுக்க நடித்துள்ளார். தன்னுடைய இமேஜிற்கு என்ன பாதிப்பு எல்லாம் ஏற்படும் என்று சிந்திக்காமல் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். தினசரி ஒவ்வொருவரிடமும் வித்தியாச வித்தியாசமாக கடன் வாங்கி அவரது நண்பர் யோகி பாபு உடன் குடிக்கும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் யோகி பாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. கதாநாயகி உபாசனாவிற்கு நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்துகிறார். இவர்களை தவிர வினோதினி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ் ஆகியோரின் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது.
இன்டர்வெல்லில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படமாக பார்க்கும் போது அவை பெரிதாக தெரியவில்லை. படத்தின் இறுதியில் ஒரு நல்ல கருத்தை சொல்ல முயற்சித்துள்ளனர். குடிகாரனை யாரும் திருத்த முடியாது அவனே நினைத்தால் தான் திருந்த முடியும் போன்ற வசனங்களும் நன்றாக இருந்தது. இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் ஒரு பாடல் மட்டும் கேட்கும்படி இருந்தது. கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு, ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு கதைக்கு ஏற்றார் போல் இருந்தது. கதையாக நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும் இந்த லோக்கல் சரக்கு. ஆனால் எதார்த்த வாழ்க்கையில் ஒரு குடிகார கணவனால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை இந்த படம் காண்பித்துள்ளதால் இது பலருக்கும் மனதிற்கு நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளது.