அமெரிக்காவின் பிரதான கட்சிகள் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி. இவற்றில் ஜனநாயகக் கட்சியின் சின்னம் கழுதை, குடியரசுக் கட்சியின் சின்னம் யானை. இந்த சின்னங்கள் இன்று, நேற்றல்ல, கடந்த நூறு ஆண்டுகளாக மாறுபடாமல் இருந்து வருகின்றன.
1829 முதல் 1837 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜாக்சன். அவரை எதிர்த்தவர்கள் அவரை 'ஆண் கழுதை' என்று குறிப்பிட்டார்கள். சளைக்காத ஜாக்சன், கழுதையின் உருவத்தை, தன்னுடைய தேர்தல் சுவரொட்டியில் பதித்து, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். எனவே, ஜனநாயகக் கட்சியுடன் கழுதை சின்னம் ஐக்கியமாகியது. அவருக்குப் பிறகு, 1870 தேர்தல் வரை தேர்தலில் கழுதை சின்னத்திற்கு இடமிருக்கவில்லை.
அமெரிக்காவின் உள் நாட்டுப் போர் 1861 முதல் 1865 வரை நடந்தது. இந்த உள்நாட்டுக் கலகத்தை மாநிலங்களிடையேயான போர் என்றும் சொல்வார்கள். இந்தப் போர் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் வட மாநிலங்களுக்கும், அடிமைகள் வேண்டும் என்று சொல்லும் தென் மாநிலங்களுக்கும் இடையே நடந்தது. வட மாநில வீரர்கள் 'சண்டையில் பங்கேற்றேன்' என்பதற்கு சங்கேதமாக 'யானையைக் கண்டேன்' என்று சொல்வார்கள். இந்தப் போரில் வட மாநிலப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் ஆபிரகாம் லிங்கன். ஒன்றிணைந்த அமெரிக்கா வேண்டும் என்று போராடிய லிங்கன், 1864 குடியரசுத் தலைவர் தேர்தல் சுவரொட்டிகளில் யானை உருவத்தை உபயோகித்தார். அதனால், லிங்கன் சேர்ந்த குடியரசுக் கட்சியின் சின்னம் யானை என்ற எண்ணம் உருப்பெற்றது.
1870 ஆம் வருடம் 'அமெரிக்காவின் கார்ட்டூன் தந்தை' என்று வர்ணிக்கப்படும் நாஷ், 'ஹார்பர்ஸ் வீக்லி' எனும் பத்திரிகையில் ஜனநாயக கட்சிக்கு கழுதைப் படத்தையும், குடியரசுக் கட்சிக்கு யானைப் படத்தையும் வரைந்து கார்ட்டூன் அமைக்க, இந்த சின்னங்கள் மேலும் பிரபலமாயின. (தன்னுடைய கார்ட்டூன்களால் 1864 முதல் 1884 வரை நடந்த குடியரசுத் தேர்தல்களின் போக்கை மாற்றியவர் என்ற பெயர் பெற்றவர் நாஷ்) அவருக்குப் பிறகு வந்தவர்கள் இரண்டு கட்சிகளையும் குறிக்க கழுதை மற்றும் யானை படத்தையே தொடர்ந்து உபயோகிக்க, இவை நிரந்தர சின்னங்களாக மாறி விட்டன.
1985ஆம் வருடம் ஜனநாயகக் கட்சி, கழுதை சின்னத்தை துறக்க முயற்சிப்பதாக, 'நியூயார்க் மேகசைன்' அறிவித்தது. ஆனால், இன்று வரை இந்த சின்னம் மாற்றப்படவில்லை. இன்றும் கட்சியின் மாநாடுகளில் கழுதை சின்னம் இடம் பெற்று வருகிறது. குடியரசுக் கட்சியைப் பொருத்தவரை, யானை சின்னத்தை சுவரொட்டி, கட்சியின் அதிகார பூர்வ அறிவிப்புகள் ஆகியவற்றில் இன்றும் காணலாம்.