பாது திருவிழா (Bhadu Festival) என்பது மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் ஒரு சமூக விழாவாகும். வங்காள நாட்காட்டியில் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளிலிருந்து இந்தத் திருவிழா தொடங்கி, அம்மாதத்தின் இறுதி நாள் வரை நடைபெறுகிறது. இத்திருவிழா நடைபெறுவதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. வாங்க, அந்தக் கதையை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
லாரா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மோரல். வத்ராமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையை, மோரலும் அவரது மனைவியும் பத்ரேஸ்வரி (பத்ராவதி) என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவளைச் செல்லமாக, பாது என்ற பெயர் கொண்டும் அழைத்தனர்.
பத்ரேஸ்வரியைப் பற்றிக் கேள்விப்பட்ட காசிபூர் (தற்போதைய புருலியா மாவட்டத்தில் உள்ள ஊர்) மன்னர் நீலமணி சிங், அவளைத் தத்தெடுத்து வளர்க்க விரும்பினார்.
ஆனால் அவள் அரசருடன் சென்று இருக்க விரும்பவில்லை. அவளது வளர்ப்பு பெற்றோருக்கும் அவளைத் தத்து கொடுக்க விருப்பமில்லை. இருப்பினும், அரசன் அவளை, இளவரசி என்று ஊர் முழுவதும் அறிவித்தான். பதினாறு வயதான போது, பாது பக்கத்துக் கிராமத்திலுள்ள ஒரு மருத்துவரின் மகனான அஞ்சன் என்பவரைக் காதலித்தாள். அதனை ஏற்காத மன்னன், அஞ்சனை ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் சிறையில் அடைத்தான்.
பாது தனது இரண்டு தோழர்களுடன் ராயம் முழுவதும் பயணம் செய்து சிறைச்சாலைகளுக்கு அருகில் அவளது காதலைப் பற்றி பாடினாள். அஞ்சன், எப்படியும் தனது குரலைக் கேட்பார் என்று நம்பி பல்வேறு சோகப் பாடல்களை பாடினாள். இவ்வகை பாதுவின் பாடல்கள் அனைத்தும் 'ராதா பாவம்' என்று கூறப்படுகிறது.
ஒரு நாள், அவளது உள்ளம் உருகும் பாடலைக் கேட்ட மன்னனின் உள்ளமும் கரைந்தது. அவன் அஞ்சனை விடுவித்தான். மேலும், அஞ்சன் அவளைத் திருமணம் செய்து கொள்வதற்கும் ஒப்புக் கொண்டான்.
ஆனால், எதிர்பாராத விதமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் வழியில் அஞ்சன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டான். தனது காதலன் இறந்ததை அறிந்து வருத்தமடைந்த பாது, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.
அதன் பிறகு, இளவரசி பாதுவைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகவே, இந்த ‘பாது திருவிழா’ நடத்தப்பெறுகிறது. இளவரசி பத்ரேஸ்வரி லட்சுமி தேவியின் உருவகமாக கருதப்படுகிறாள்.
மேற்கு வங்காளத்தின் புருலியா, பாங்குரா, பிர்பூம் மற்றும் பர்தாமான் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் விமரிசையாக இந்த பாது திருவிழா பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.
வங்காள நாட்காட்டியின் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளில் அவளது உருவத்தை உருவாக்கி அதன் முன் வழிபாடு செய்கின்றனர். அந்த மாதம் முழுவதும், பாதுவின் உருவச் சிலை முன்பு பாடி ஆடுவார்கள். பத்ராவின் கடைசி நாளில், அந்த உருவச் சிலையை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அந்த உருவச் சிலையைத் தண்ணீரில் கரைப்பார்கள்.
இந்த ஒரு மாதத் திருவிழாவில் பல தொழில்முறை பாடகர்கள் மட்டுமின்றி, பாடல் பாட ஆர்வம் கொண்ட அனைவரும் அங்கு வந்து பாடல்களைப் பாடி, வழிபாடு செய்ய முடியும். திருமணத்தை மையமாகக் கொண்டுள்ள பாடல்களை பாடுவது இத்திருவிழாவின் முக்கியச் சடங்காக இருக்கிறது. இத்திருவிழாவின் போது, இங்கு கண்காட்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப் படுகின்றன.