Dindigul lock 
கலை / கலாச்சாரம்

திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திண்டுக்கல் பூட்டுகள்!

ஆர்.வி.பதி

திண்டுக்கல் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அங்கு தயாரிக்கப்படும் பூட்டுகள். நூறாண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல்லில் பூட்டு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. ‘தென்னிந்தியாவின் அலிகார்’ என்ற பெயர் பெற்ற நகரம் திண்டுக்கல். இங்கு நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர், பெருமாள்கோயில்பட்டி, கம்மாளப்பட்டி, நாகர் நகர் முதலான பகுதிகளில் ஆறு முதல் எட்டு லீவர் கொண்ட பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

திண்டுக்கல் பூட்டு திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியிருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொருட்காட்சியில் திண்டுக்கல் பூட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூட்டைத் திறந்து காண்பிப்போருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றும் வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி, அந்தப் பூட்டை யாராவது திறந்து விட்டால் அதைத் தயாரித்தவரின் கை கட்டை விரலை துண்டிப்பதாகவும் சவால் விடப்பட்டது. பரபரப்பான இந்த சவாலை ஏற்ற பலர் பூட்டைத் திறப்பதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், அந்த பூட்டை யாராலும் திறக்க இயலவில்லை. சவாலில் திண்டுக்கல் பூட்டு வெற்றி வாகை சூடியது. இதன் பின்னர் திண்டுக்கல் பூட்டின் பெருமை எங்கும் பரவத் தொடங்கியது.

திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டுகள் மிகச் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் மூலமாக திண்டுக்கல் பூட்டின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. பின்னர் திண்டுக்கல் பூட்டானது வெளிநாடுகளுக்கும் செல்லத் தொடங்கியது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் கருதி பலர் விரும்பி வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

முற்காலத்தில் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட கொலைகாரன் பூட்டு மிகவும் பெயர் பெற்றது. திருடர்களை பயப்படவும் வைத்தது. காரணம் இந்தப் பூட்டைக் கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றால் அதிலுள்ள ஒரு சிறிய கத்தி வெளியே வந்து பூட்டைத் திறப்பவரின் கையைப் பதம் பார்த்து விடும். இது மட்டுமின்றி மாங்கோ பூட்டு, சாவி பிடி பூட்டு முதலான 24 வகையான பூட்டுக்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனையாகி பிரபலமாகத் திகழ்ந்தன.

சாவி பிடி பூட்டை கள்ளச்சாவி போட்டுத் திறந்தால் அந்தச் சாவியை பூட்டு பிடித்துக் கொள்ளும். அதை வெளியே எடுக்கவே முடியாது. இதுவே சாவி பிடி பூட்டு என அழைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் மாங்கோ பூட்டுக்கள் புகழ் பெற்றவை. இந்தப் பூட்டின் பக்கவாட்டில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால்தான் பூட்டு திறக்கும்.

திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட மணிப்பூட்டும் மிகவும் பிரபலம். எட்டு அங்குல அளவுள்ள இந்த பூட்டைத் திறக்க ஒவ்வொரு முறை சாவியை நுழைத்துச் சுழற்றும் போதும் ஐந்து முதல் பத்து முறை மணியடிக்கும்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலிகார் பூட்டு மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்டு மலிவு விலையில் விற்பனையாகும் பூட்டுக்களால் திண்டுக்கல் பூட்டு விற்பனை சரியத் தொடங்கியது.

உலகப்புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டின் பெருமையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அதற்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஊர்களில் சில பொருட்கள் தரத்தில் தனித்தன்மை பெற்று விளங்கும். அத்தகைய பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அந்த குறிப்பிட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் அதே பெயரில் தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்பது விதி.

திண்டுக்கல் பூட்டு தயாரிப்பில் மட்டுமின்றி, இரும்புப் பெட்டிகள் (Iron Safe) தயாரிப்பிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. சிறிய அளவு முதல் ஆளுயரம் வரை வலுவான இரும்புப் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. மேலும், கோயில் உண்டியல்கள் மற்றும் ஏழு சாவிகள் கொண்ட பாதுகாப்புப் பெட்டகங்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விஜய் டிவி புகழின் மகள்!

SCROLL FOR NEXT