கி.பி. ஏழு மட்டும் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பல்லவ மன்னர்களின் முயற்சியால் வடிவமைக்கப்பட்டு, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும், காலத்தால் அழியாத சிற்பங்களையும் நினைவுச் சின்னங்களையும் கொண்ட மாமல்லபுரத்தில் வீற்றிருக்கும் ஒரு அதிசயம்தான் இந்த கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து.
தேசிய நினைவுச் சின்னம்: யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகாரம் பெற்றுள்ள வரலாற்று கடற்கரை நகரமான மாமல்லபுரம் பலரும் விரும்பும் சுற்றுலா தலமாகும். இங்குதான் பிரம்மாண்டமான கிருஷ்ணன் வெண்ணெய் பந்து உள்ளது. இது இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும்.
இயற்கை அதிசயம்: கிருஷ்ணன் வெண்ணெய் பந்து ஒரு வசீகரிக்கும் இயற்கை அதிசயமாகும். இது புராணம் வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றின் கலவையாக விளங்கும் ஒரு பிரம்மாண்டமான கிரானைட் உருண்டையாகும். கடவுள்களால் வடிவமைக்கப்பட்டது போல தோன்றும் அளவுக்கு சரியான சமநிலை மற்றும் விகிதாச்சாரத்தின் ஒரு கோலமாக காட்சியளிக்கிறது. இயற்பியல் மற்றும் இயற்கை விதிகளை மீறி அதன் சிறிய பீடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல இது அமர்ந்து கொண்டிருக்கிறது.
வானத்தின் இறைகல்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு வெண்ணெய் பிரியர். அடிக்கடி தனது வீட்டிலும் கோகுலத்தில் உள்ள பிற வீடுகளிலும் வெண்ணெய் திருடி உண்ணும் பழக்கம் கொண்டவர். தொங்கவிடப்பட்டிருக்கும் அடுக்கடுக்கான உறிப்பானைகளில் கையைவிட்டு வெண்ணெய்யை கை நிறைய அள்ளியெடுத்து உருண்டையாக்கி வாயில் போடுவார் என்கிறது புராணங்கள். இந்தப் பாறை கிருஷ்ணர் வானத்திலிருந்து இறக்கிய வெண்ணைத் துளியை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது. வானத்தின் இறைகல் என்று மக்கள் இதை நம்புகிறார்கள்.
பிரம்மாண்டமான கற்பாறை: இந்த பட்டர் பால் பாறை சுமார் 20 அடி உயரமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு மாபெரும் கிரானைட் கற்பாறையாகும். இது சுமார் 250 டன் எடையுள்ளது. எந்த நேரத்திலும் கீழே உருண்டு விழும் என்பது போல தோற்றத்தை கொடுக்கக் கூடியது. ஒரு மலைச்சரிவில் இந்தப் பாறை அமைந்துள்ளது. இது புவியீர்ப்பு விசையை மீறி அங்கு வீற்றிருப்பதாக கருதுகிறார்கள். ஏனென்றால் 45 டிகிரி சாய்வில் இந்த பந்து இருந்தாலும் நிலையாக நிற்கிறது சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்க்கும் இந்தப் பாறை.
இயற்கை மற்றும் அறிவியலின் அற்புதம்: பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் இந்த பாறையை நகர்த்துவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அது தோல்வியில்தான் முடிந்தது. 1908ம் ஆண்டில் அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக் ஏழு யானைகளைப் பயன்படுத்தி இந்தப் பாறாங்கல்லை அந்த இடத்திலிருந்து நகர்த்த முயற்சி செய்தார். ஆனால், அதை ஒரு அடி கூட நகரவில்லை. 2019ல் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டின்போது கிருஷ்ணாவின் பட்டர்பால் முன்பு கைகளைப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
1200 ஆண்டு அதிசயம்: இது இயற்கையாகவே அமைக்கப்பட்ட ஒரு உயரமான பீடத்தின் மேல் மிதந்து நிற்பதாகவே தோற்றமளிக்கிறது. 1200 ஆண்டுகளாக இதே இடத்தில் இருக்கிறது. மேற்புறம் உள்ள பாறையின் ஒரு பகுதி உடைந்து பின்புறத்தில் இருந்து அரைக்கோள வடிவ பாறை போல தோற்றமளிக்கும். மற்ற மூன்று பக்கங்களில் இருந்தும் பார்க்கும் போது வட்ட வடிவில் தோன்றுகிறது இந்த அதிசய வெண்ணெய் பந்து.