கவலை போக்கும் பொம்மைகள் (Worry Dolls) அல்லது குழப்பம் நீக்கும் பொம்மைகள் (Trouble Dolls) கைகளாலேயே உருவாக்கப்படுகின்றன. குவாத்தமாலா நாட்டில் தோன்றிய இவ்வகைப் பொம்மைகள், சிறிய கம்பி, கம்பளி மற்றும் வண்ணத் துணித் துண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
மாயன் ஆதிவாசிகள் அணியும் உடைகளைப் போன்று, இந்தப் பொம்மைகளின் ஆடையமைப்புகள் உள்ளன. பொம்மைகளின் அளவு ½ அங்குலம் மற்றும் 2 அங்குலம் இடையே வேறுபடலாம். மேற்கத்திய நாடுகளில், இந்த பொம்மைகள் பெரும்பாலும் அழுத்தப்பட்ட காகிதம், பிசின் பட்டை, காகிதம் மற்றும் வண்ணக் கம்பளி போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன.
இந்தக் கவலை போக்கும் பொம்மைகள் பயன்பாட்டிற்கு வந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது.
மாயன் சமூக இளவரசியான எக்ஸ்ம்யூகேன் என்பவருக்கு அடிக்கடி கவலைகள் தோன்றிக் கொண்டிருந்தன. அவள் தன்னுடைய கவலைகளைப் போக்க சூரியக் கடவுளை வேண்டினார். சூரியக் கடவுள், அவளுக்குக் கவலைகளைப் போக்கும் சிறப்பு வாய்ந்த ஒரு பொம்மையைப் பரிசாகத் தந்தார். அந்தப் பொம்மையை இரவில் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் போதும், அவரது கவலைகள் எல்லாம் காலையில் எழும் போது நீங்கிவிடும் என்றார்.
அதனைப் பெற்ற இளவரசி, தினசரி இரவு அந்தப் பொம்மைகளிடம் தன் கவலைகளைச் சொல்லிப் படுத்து விடுவார். மறுநாள் காலையில் அவளுடைய கவலைகள் எல்லாம் இல்லாமல் போயின.
அதன் பிறகு, மாயன் சமூகத்தினரில் சோகமாகவும் வருத்தமாகவும் காணப்படும் குழந்தைகளுக்கு இந்தக் கவலை போக்கும் பொம்மைகளைப் பரிசாகத் தரும் வழக்கம் தொடங்கியது.
பெரியவர்கள் பரிசாகத் தரும் கவலை போக்கும் பொம்மைகளைப் பெறும் குழந்தைகள், தங்கள் வருத்தங்கள், அச்சங்களை அந்தப் பொம்மைகளிடம் சொல்லிவிட்டு, பின்னர் அதனைத் தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்கின்றன. அடுத்த நாள் காலை தூங்கி எழும் போது, அனைத்துத் துயரங்களும் அந்தப் பொம்மையால் அகற்றப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
கவலை பொம்மைகள் பெரும்பாலும் பெட்டிகள் அல்லது துணிப் பைகளில், 6 பொம்மைகளைக் கொண்ட குழுக்களாக இடம் பெற்றிருக்கின்றன. வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்றும், ஒரு நாள் ஓய்வெடுக்கும் நாள் என்றும் கொண்டு, இந்தப் பொம்மைகளைக் குழந்தைகள் பயன்படுத்துகின்றனர்.
மெக்சிகோவுக்கும், குவாதமாலாவுக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தப் போம்மைகளை நினைவுப் பொருளாகவும், தங்கள் குழந்தைகளுக்குத் துணையாகவும் வாங்கிச் செல்லும் மிகப் பிரபலமான பரிசுப்பொருளாகத் தற்போது மாறி இருக்கிறது.