இன்றைய காலத்தில் நடு இரவில் பிரியாணி சாப்பிடுவது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண விழாக்கள் அல்லது சலிப்பை போக்கிக்கொள்ள என பல காரணங்களால் இதை செய்யத் தொடங்கித் விட்டார்கள். ஆனால், இந்தப் பழக்கம் நம் ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
பிரியாணி பொதுவாக அரிசி, இறைச்சி, மசாலா மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் அதிக கலோரிகளைக் கொண்டவை. இரவில் தூங்குவதற்கு முன் அதிக கலோரிகளை உட்கொள்வது, அவை எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இது படிப்படியாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
பிரியாணி உணவு செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இரவில் தூங்குவதற்கு முன் பிரியாணி சாப்பிட்டால் உங்கள் உடல் ஓய்வில் இருக்கும் போது ஜீரணம் செய்ய வேண்டி இருக்கும். இது வயிற்று எரிச்சல், அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நடு இரவில் அதிகமாக உணவை சாப்பிட்டுவிட்டு தூங்குவது தூக்கத்தை பாதிக்கும். இது தூக்கமின்மை, தூக்கத்தில் திடீரென விழித்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
பிரியாணியில் அதிக கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நீண்ட காலமாக இரவில் பிரியாணி சாப்பிட்டு வந்தால் இதய நோய், உயரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பிரியாணியில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், நீண்ட காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நடு இரவில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு நாம் எளிதில் ஆளாக நேரிடும். என்னதான் நண்பர்களுடன் நடு இரவில் சென்று சுவையான பிரியாணி சாப்பிடுவது சிறந்த அனுபவமாக இருந்தாலும், அது நம் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், நடு இரவில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து, நல்ல தூக்கத்தை பெறுவதன் மூலம் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே, இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தளங்களில் நடு இரவில் பிரியாணி சாப்பிடும் வீடியோக்களைப் பார்த்து, நீங்களும் தவறாக influence ஆகாதீர்கள். இது உங்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும்.