கார் இல்லாத வீடு இல்லை என்ற நிலை இன்னும் கொஞ்ச நாளில் ஏற்பட்டு விடும். இந்த காரை நமக்கு வரப்பிரசாதமாக அளித்தது யார் தெரியுமா? கார்ல் பென்ஸ் என்ற கண்டுபிடிப்பாளர்தான். அவரது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றி சற்று பார்ப்போம்.
கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து, கற்பனையில் கணக்கற்ற வரைபடங்களாகத் தீட்டினார். பின்பு இயந்திரங்களின் சுழற்சி நுணுக்கங்களை அறிந்துகொண்டு, நான்கு சக்கர வண்டியைத் தயாரித்தார். அது நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். கை சுழற்சியால் சிறிது தூரம் அது தானாகவே ஓடும்படி செய்தார்.
பின்பு இவரது மனைவி பெர்த்தா ரிங்கருடன் இணைந்து ஸ்பார்க் பிளக், கார்பரேட்டர், கிளச், கியர் ஷாப்ட் போன்றவற்றை உருவாக்கி காப்புரிமை பெற்றார். இவர்கள் 2 ஸ்ட்ரோக் இன்ஜினை வடிவமைத்து 1879ம் ஆண்டு அதற்குக் காப்புரிமை பெற்றனர்.
பென்ஸ் அண்ட் ஸீ நிறுவனம் 1883ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார் வேகன் 1885ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எரிபொருளால் இயங்கும் முதல் வாகனம் இது. 1886ம் ஆண்டு இவர் இந்த வாகனத்திற்கான காப்புரிமையைப் பெற்றார். இவர்கள் தயாரித்த இருவர் பயணிக்கும் 'விக்டோரியா' வாகனம் (1893), முதல் சரக்கு வாகனம் (1895) ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. 4000 வாகனங்கள் விற்பனையுடன் உலகின் முதல்தர வாகன உற்பத்தியாளர் என்ற மதிப்பை 1903ம் ஆண்டு பென்ஸ் நிறுவனம் பெற்றது.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு, டிஎம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, 'மெர்சிடிஸ்-பென்ஸ்' என்ற புதிய வடிவம் பெற்றது. அதுவே வர்த்தகப் பெயராக நிலைத்து நின்றது. உலகம் முழுவதும் நம்மைச் சுற்ற வைத்த சாதனையாளர் கார்ல் பென்ஸ் 1929ம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் கண்டுபிடிப்பு இந்த உலகம் முழுவதும் இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கும். இதுதான் ஒரு மனிதனின் மகத்தான சாதனை.