Karpini Pengalukku Valaikappu vizha Ethargaka Theriyumaa? https://www.pothunalam.com
கலை / கலாச்சாரம்

தலைப்பிரசவ கர்ப்பிணிகளுக்கு ஏன் செய்ய வேண்டும் வளைகாப்பு?

சேலம் சுபா

மது கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் வழிவழியாகக் கடைப்பிடித்து வரப்படுவது தலைப்பிரசவ கர்ப்பிணிப் பெண்களின் வளைகாப்பு விழா. இந்த விழாவை ஏன் நடத்த வேண்டுமா? இதனால் என்ன பயன் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தாயின் கருவறைக்குள் அடைக்கலமாகி புதிய உலகத்தைக் காண காத்துக்கொண்டிருக்கும் புத்தம்புது மழலையோடு வெளியில் உள்ள உறவுகள் பேசும் யுக்தியே வளைகாப்பு எனலாம். கருவறையில் நீச்சலடித்துக் கொண்டு இருக்கும் சிசுவிற்கு தான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் உணர்வுபூர்வமாக கேட்டுக் கொண்டிருக்கும்  கேள்விகளுக்கு பெரியோர்களால் வெளியிலிருந்து  கூறப்படும் பதில்களாக அமைய வழிவகுக்கிறது வளைகாப்பு.

இந்தச் சடங்கின்போது கர்ப்பிணி பெண்ணின் இரண்டு கைகளிலும் ஒலி எழுப்பும் வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர். அதற்கு முன் வேப்ப இலைகளால் பின்னப்பட்ட காப்பு வளையல் அணிவார்கள். பல பேர் கூடும் சபையில் கர்ப்பிணி பெண்ணை நோய்த்தொற்று அணுகாமல் பாதுகாக்கவே இந்த வேப்ப இலைக்காப்பு வளையல்கள்.

இந்தச் சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் யாரோ ஒருவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வருவதில்லை. முன்னோர்கள் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை பலமுறை ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணர்ந்து பின்னர் சடங்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிவழியாக நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு அன்றைய பெரியோர்களால் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்ப்பம் தரித்து ஏழாம் மாதம் அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. ஏழு இல்லை என்றால் ஒன்பதாம் மாதம் வைப்பதுண்டு. ஆனால், நிறைமாத கர்ப்பிணியால் அதிக நேரம் நிகழ்வில் அமர முடியாமல் களைத்துப் போவார்கள் என்பதால் பெரும்பாலும் ஒற்றைப்படை மாதமான ஏழாம் மாதமே இச்சடங்கை செய்கிறார்கள்.

இன்னொரு காரணம் ஆறாம் மாதம் முதல் வளர்ச்சி அடைந்த குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் கவனிக்கத் துவங்குவது ஆறாம் மாதத்தில் இருந்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாகக் கேட்கவும் துவங்குகிறது.

ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்று மகிழ வைக்கிறோம். தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும் என்பதால்தான் அதிக சப்தம் கூடாது எனவும் மங்கலகரமான இசையுடன் கன்னத்தில் குளிர்ந்த சந்தனம் தடவி நலங்கு வைக்கிறார்கள். ‘உன்னைச் சுற்றி நாங்கள்  இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம்’ என்று குழந்தைக்கு பாதுகாப்பு உறுதிமொழி தருகிறது வளைகப்பு.

தாயின் கருவறையில் இருக்கும்போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் போன்றவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளை, உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக, அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சயம் செய்து கொள்கிறது. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது. அதேபோல், ஒளியையும் குழந்தையால் உணர முடியும். பளிச்சென்ற லைட்டுகள் அடிக்கப்படும்போது அதனை எதிர்கொள்ளும் முகமாக குழந்தை அசைவதை ஆராய்ச்சிகளில் பல தாய்மார்கள் உறுதி செய்துள்ளனர்.

கருவிலிருக்கும் குழந்தையை வளைகாப்பில் தாய் அணியும் கண்ணாடி வளையல்களின் சப்தம் உற்சாகப்படுத்தும். உறவினர்களின் கூடுகையும் கலவை சாதங்களின் சத்துகளும் குழந்தைக்கு மன வளத்தை ஏற்படுத்தி உடல் வலு தரும்.

வளைகாப்பு சடங்கு சிசுவைத் தாங்கும் தாய்க்கும் பொறுப்புணர்வைத் தந்து தனக்காக இத்தனை உறவுகள் உள்ளனரா எனும் மகிழ்வுடன் பிரசவத்தை எதிர்கொள்ள வைக்கும். இப்படி பல நன்மைகள் தாய்க்கும் சேய்க்கும் தரும் வளைகாப்பு போன்ற சடங்குகளின் தாத்பர்யம் புரிந்து செய்யும்போது மேலும் சிறக்கும் இதுபோன்ற பாரம்பரிய விழாக்கள்.

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT