விடுதலை 2 படத்தில் இணைந்துள்ள மாஸ் நடிகரால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது விடுதலை தான்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். கடைநிலை காவல் அதிகாரியாக நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ்மேனன், கௌதம் மேனன், ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
'விடுதலை' படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாகம் வெளியாகி ஹிட்டானதைத் தொடர்ந்து, 'விடுதலை 2ம் பாகம்' எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இப்பட பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். படத்தில் ஏற்கனவே மாஸான நடிகர்கள் இருக்கும் நிலையில், தற்போது நடிப்பு அரக்கனாக திகழும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்கள் பலரும் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம். தற்போது இவர் கேமியோ ரோலில் இந்த படத்தில் இடம் பெறுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஜனவரி மாதத்தில் விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பத்த நிலையில், இன்னும் படம் முடியாத நிலையில் உள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.