ஓரிகாமி (Origami) என்பது ஜப்பானில் தோன்றிய ஒரு கலை வடிவம். காகிதத்தை பல கோணங்களில் மடித்து பலவிதமான உருவ வடிவங்களை உருவாக்குவதே ஓரிகாமி என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் பாரம்பரியமான இக்கலையினைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளுவோம்.
'ஓரி' என்பது காகிதத்தையும் 'காமி' என்பது காகிதத்தை மடிப்பதையும் குறிக்கும் விதமாக இந்தப் பெயர் உருவானது. இதற்கு ஒரு சிறிய காகிதம், பொறுமை மற்றும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் இக்கலையினை எளிதில் கற்கலாம்.
காகிதம் தயாரிக்கும் முறை சீனாவிலிருந்து ஜப்பானுக்கு ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. ஓரிகாமி எனும் இக்கலை வடிவம் பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டில் தொடங்கி, பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் இக்கலை ஜப்பானில் மிகவும் பிரபலமடையத் தொடங்கியது. கி.பி. 1797ம் ஆண்டு ஓரிகாமி பற்றிய உலகின் மிகப் பழைமையான புத்தகமான ‘ஹிஃபு சென்பசுரு ஓரிகாட்டா’ வெளியிடப்பட்டது.
ஜப்பானில் மெய்ஜி சகாப்தமானது (கி.பி.1868 முதல் கி.பி.1912 வரை) மெய்ஜி பேரரசர் முட்சுஹிட்டோவின் ஆட்சியின் கீழ் இருந்தது. இக்காலகட்டத்தில் ஓரிகாமி முதலில் மழலையர் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஓரிகாமி ஜப்பானில் பிரபலமடைந்தது. பிறகு இக்கலை மெல்ல மெல்ல பிற உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் பலரால் விரும்பப்படும் ஒரு கலையாக ஓரிகாமி திகழ்கிறது.
ஒரு சதுர அல்லது செவ்வக வடிவ காகிதத்தைக் கொண்டு மடித்தல் வளைத்தல் மூலமாக விரும்பும் உருவங்களை இக்கலையின் மூலம் உருவாக்க முடிகிறது. பிற கலை வடிவங்களில் ஒட்டுதல், வண்ணம் பூசுதல் முதலான வேலைகள் பின்பற்றப்படும். இக்கலையின் சிறப்பு என்னவென்றால் இதில் ஒரே ஒரு காகிதம் மட்டும் இருந்தால் போதும். ஆனால், ஓரிகாமி கலையில் வெட்டுவது ஒட்டுவது வண்ணம் பூசுவது என எந்த வேலையும் இல்லை. சில குறிப்பிட்ட வடிவங்களில் காகிதத்தை மடித்தால் நாம் விரும்பும் உருவங்களை உருவாக்கி விடலாம் என்பதே இதன் சிறப்பாகும். ஓரிகாமி கலை வடிவத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குவது ஜப்பானிய கொக்கு ஆகும்.
ஓரிகாமி கலையானது ஜப்பானியர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு கலையாக விளங்குகிறது. குறிப்பாக ஓரிகாமியில் கொக்கு வடிவமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான ஜப்பானியர்களுக்கு ஓரிகாமியில் கொக்கு வடிவத்தை உருவாக்குவது எப்படி என்பது தெரியும். ஓரிகாமி மூலம் ஆயிரம் கொக்கு வடிவத்தை உருவாக்கினால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஜப்பானிய பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. நோய்வாய்ப்பட்ட நபரின் குடும்பத்தினர் அல்லது அவருடைய நண்பர்கள் அவருக்கு ஆயிரம் ஓரிகாமி பேப்பர் கொக்குப் பூங்கொத்தை வழங்குகிறார்கள். இதனால் அவரது நோய் விரையில் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
யானை, மாடு, எலி, பறவை, கொக்கு என எந்த ஒரு உருவத்தையும் நாம் ஓரிகாமியின் மூலம் உருவாக்க முடியும். தற்காலத்தில் ஓரிகாமி கலையினைப் பயில ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. இதை வைத்து இக்கலையினை பயிற்சி செய்து எளிதில் கற்கலாம்.
உலகம் முழுவதும் ஓரிகாமி சங்கங்கள் உள்ளன. ஜப்பான் ஓரிகாமி அகாடமிக் சொசைட்டி (Japan Origami Academic Society) ஒரு புகழ் பெற்ற ஓரிகாமி சங்கமாகும்.