Toranam 
கலை / கலாச்சாரம்

தோரணங்கள் கட்டும் காரணங்கள் தெரியுமா பாஸ்?

தேனி மு.சுப்பிரமணி

தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் மங்கள நிகழ்வுகளிலும் தோரணங்கள் இடம் பெறுகின்றன. தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாகச் செய்யும் ஒரு அலங்கார அமைப்பாக, தோரணங்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தோரணங்கள் இயற்கையாகக் கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டும், சில செயற்கைப் பொருட்களைக் கொண்டும் அமைக்கப்படுகின்றன. இங்கு சில தோரணங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.  

தென்னங் குருத்தோலைத் தோரணம்:

தென்னங் குருத்தோலையால் செய்யப்படும் குருத்தோலைத் தோரணங்களை மங்களத் தோரணம், அமங்களத் தோரணம் என்று இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. இத்தோரணங்களில், இடம் பெறும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படுகின்றன. 

சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவ்வகைத் தோரணங்களானது நான்கு குருவிகளைக் கொண்டதாகவும், இத்தோரணங்களில் குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கின்றன.  

இறப்பு உள்ளிட்ட அமங்கள நிகழ்வுகளின் போது கட்டப்படுவது அமங்களத் தோரணம் எனப்படும். இவ்வகைத் தோரணங்களானது மூன்று குருவிகளைக் கொண்டதாகவும், இத்தோரணங்களில் குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கின்றன.

மாவிலைத் தோரணம்:

இந்து சமயப் பண்பாட்டில் வீடுகளில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போது, மங்களத்தின் அடையாளமாக மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது. குறிப்பாக, நிலவாசற்படியில் இந்த மாவிலைத் தோரணத்தை சிறப்பு நாட்களிலும், விழாக்களின் போதும் அனைத்து வீடுகளிலும் கட்டுவது வழக்கமாக இருக்கிறது. இப்படி மாவிலைத் தோரணம் கட்டுவதால் வீட்டில் துன்பம் தரக்கூடிய துர்சக்திகள் நுழைய முடியாது என்கிற தொன்ம நம்பிக்கையும் இருக்கிறது. 

ஒரு நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, மாவிலைகளை ஒரே அளவு உள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதனைச் சுத்தம் செய்து  துடைத்து, அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நன்கு காய வைத்து கட்ட வேண்டும். அந்த நூலில் 11 அல்லது 21, 101 எனும் எண்ணிக்கையில் மாவிலைகளைக் கோர்க்கப்பட்டு இத்தோரணம் அமைக்கப்படுகிறது. சமய விழாக்களாக இருப்பின், இந்த மாவிலைத் தோரணத்துடன் சில வேப்பிலைக் கொத்துகளையும் சேர்த்துத் தோரணம் அமைக்கப்படுகிறது. 

மாவிலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடும் தன்மை கொண்டவை. மேலும் மா இலைகள் கிருமி நாசினியும் கூட என்பது இங்கு கவனத்திற்குரியது.

வேப்பிலைத் தோரணம்:

ஒரு நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, அதில் வேப்பிலைக் கொத்துகளைக் கோர்த்து இத்தோரணம் அமைக்கப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக் காலத்தில், தெருக்களில் இத்தோரணம் அமைக்கப்படுகிறது.

இதேப் போன்று, வீட்டில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும், வீட்டு வாசலில் வேப்பிலைத் தோரணம் அமைக்கப்படுகிறது. 

இத்தோரணத்தில் கட்டப்படும் வேப்பிலை கிருமிநாசினி என்பதால் அம்மை நோய் உள்ளிட்ட கோடைக்கால வெப்பநோய்கள் குணமடையும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. 

பூத்தோரணம்:

இந்து சமய விழாக்களின் போது கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் அழகுக்காக பூ தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. மல்லிகை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல அழகிய மலர்களைக் கொண்டு இத்தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. 

பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்வுகள் நடைபெறும் போது, அரங்கங்கள் மற்றும் மேடைகளில் பூ தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. 

பொங்கல் திருநாளின் போது, பூளைப் பூ, ஆவாரம் பூ போன்றவைகளைக் கொண்டு தோரணம் அமைக்கப்படுகிறது.

காகிதம், நெகிழித் தோரணம்:

தற்போதெல்லாம், தென்னங்குருத்தோலை, மாவிலை, வேப்பிலை, பூ இயற்கையுடன் இணைந்த தோரணங்கள் அமைப்பது குறைந்து போய்விட்டது. காகிதம், நெகிழி (Plastic) போன்றவற்றில் செய்யப்பட்ட செயற்கையான தோரணங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

காகிதம் மற்றும் நெகிழித் தோரணங்கள் வெறும் அழகுக்கான தோரணமாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், தென்னங்குருத்தோலை, மாவிலை, வேப்பிலை, பூ போன்ற தோரணங்களிலிருந்து கிடைக்கும் இயற்கையான அழகு, நறுமணம், கிருமி நாசினிப் பலன்கள் கொண்டவைகளாக இருக்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உலகெங்கிலும் பெண் மருத்துவர்கள் உருவாக காரணமான, முதல் மருத்துவப் பட்டம் பெற்ற, பெண்மணி யார்?

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் தெரியுமா?

மஹா லக்ஷ்மியின் பிறப்பு ரகசியம் தெரியுமா?

இந்தப் பறவைங்க உங்க வீட்டுக்கு வந்தா துரத்தி விட்றாதீங்க!

Meet Gitanjali Rao: The Young Scientist and Inventor Changing the World!

SCROLL FOR NEXT