கலை / கலாச்சாரம்

சொர்க்க தரிசனத்துக்கு ஒப்பான அறுபதாம் கல்யாணம்!

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

ல்யாணம் என்பது இல்லத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணமாகும். ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்குத் திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம்.

தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால் இதை, ‘அறுபதாம் கல்யாணம்‘, ‘மணிவிழா‘, ‘சஷ்டியப்த பூர்த்தி என்றெல்லாம் சொல்வார்கள். அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாக அறுபதாம் கல்யாணம் அமைகின்றது.

குடும்பத் தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒரு வரமாகக் கருதுகின்றனர். இதனாலேயே 61ம் வயதில் அந்த ஆண், ‘சஷ்டியப்த பூர்த்தி‘ செய்து கொள்ளும் சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. வயதான தங்கள் பெற்றோரின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதியரின் ஆசிகளைப் பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்த பூர்த்தி சடங்கை செய்கின்றனர்.

சஷ்டியப்த பூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றைக் குறித்துக்கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டிலோ செய்து கொள்ளலாம். அந்த தம்பதியரின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு அழைக்க வேண்டும்.

வேதியரின் அறிவுறுத்தலின்படி, குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்த பூர்த்தி சடங்கை நிறைவு செய்வார்.

பூஜை முடிந்ததும், கலசங்களில் பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. பிறகு மணமக்களின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது.

மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாமல் ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி ஆசீர்வாதம் பெறலாம்.

இந்தத் திருமண நிகழ்வை காண்பது என்பது சொர்க்கத்தை காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண வைபவத்தில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.

பெற்றோருக்கு சஷ்டியப்த பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும், ஹோமங்களின் பலன்களால் அந்தத் தம்பதியருக்கு நோய், ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும் தருகிறது.

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

SCROLL FOR NEXT