கலை / கலாச்சாரம்

தமிழகத்திற்கு கோபுர சின்னத்தை அளித்த கோயில்!

கே.என்.சுவாமிநாதன்

திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ‘அருள்மிகு வடபத்திரசாயி, ஆண்டாள் திருக்கோயில்’ 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத் திருத்தலம், தென்காசியிலிருந்து 82கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 120 கி.மீ தொலைவிலும் உள்ளது.

முன் நாளில் இந்த இடம் காடாக இருந்தது. இதற்கு அருகிலுள்ள நிலப்பகுதிகளை ராணி மல்லி என்பவர் ஆண்டு வந்தார். அவரது இரு மகன்கள் கண்டன், மற்றும் வில்லி காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் புலியால் கொல்லப்பட்டார். சகோதரனைத் தேடி காட்டில் அலைந்த வில்லியின் கனவில் தோன்றிய  இறைவன் நடந்ததை எடுத்துரைத்து காட்டைத் திருத்தி நகரம் ஒன்றை நிர்மாணிக்க கட்டளையிட்டார். வில்லியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஊர் வில்லிபுத்தூர் என்று அறியப்பட்டது. கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வாரும், இறைவனை வரித்த ஆண்டாளும் பிறந்த புண்ணிய பூமி என்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர், அல்லது திருவில்லிபுத்தூர் என்றானது. இத்தலம் ‘முப்புரிஊட்டியதலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலின் மூலவர் வடபத்திரசாயி சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். மூலவரை தரிசிக்க படி ஏறிச் செல்ல வேண்டும். ஆதிசேஷனில் பள்ளி கொண்டு சயனக்கோலத்தில், பெருமாள் அருள் பாலிக்கிறார். காலடியில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. ஆண்டாள் சன்னதியில் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் ரங்கமன்னார், பேண்ட், சட்டை அணிந்து காட்சி தருகிறார். தமிழ் வருடப்பிறப்பு அன்று வெள்ளை வேஷ்டி அணிந்திருப்பார்.

இத்தலத்தில் ஆண்டாள், 108 திவ்ய தேசங்களில் அருள் பாலிக்கும் பெருமாள்களை  மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். சன்னதிகளுக்கு இடையே ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட பூந்தோட்டம் உள்ளது.

கருவரையைச் சுற்றிய பிரகாரங்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மதுரை திருமலை நாயக்கர், அவருடைய மனைவி மற்றும் சகோதரர்களின் ஓவியங்களையும் காணலாம்.  இவற்றைத் தவிர துவாஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியவற்றில் பெரும் அளவிளான சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.

திருவில்லிபுத்தூர் தேர் உற்சவம் பிரபலமானது. பலவகையான சிற்பங்களுடன் கலைநயத்துடன் விளங்கும் இந்தப் பெரியத் தேர் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் 1849ஆம் வருடம் செதுக்கப்பட்டது.

11 நிலைகள் மற்றும் 11 கலசங்கள் கொண்ட இராஜகோபுரத்தின் உயரம் 192 அடி. இந்தக் கோபுரத்தைக் கட்டியவர் பெரியாழ்வார். தன்னுடைய மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டியதாகக் கூறுவர். சிற்பங்கள் எதுவும் செதுக்காமல் கட்டப்பட்ட கோபுரம் என்பது இந்த கோபுரத்தின் தனிச் சிறப்பு.

தமிழர்களின் கட்டடக் கலையை எடுத்துக் காட்டும் விதமாக இருக்கின்ற காரணத்தால், இந்த கோபுரத்தை மாதிரியாக வைத்து, தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் வரையப்பட்டதாகக் கூறுவர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தை ஒத்திருப்பதாக மாற்றுக் கருத்தும் உண்டு. கோபுரம் இலச்சினையை வரைந்தவர் கிருஷ்ணாராவ் என்ற ஓவியர்.

தமிழ் பக்தி இலக்கியத்திற்கு பல பாசுரங்களைக் கொடுத்த பெருமை இத்திருத்தலத்திற்கு உண்டு. ஆண்டாளின் திருப்பாவை, மற்றும் நாச்சியார் திருமொழி, பெரியாழ்வாரின் திவ்ய பிரபந்த பாசுரங்கள் இன்றளவும் இசைக்கப்படுகின்றன. . பெரியாழ்வாரின், “பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு” என்ற திருப்பல்லாண்டு, எல்லா வைணவக் கோயிலிலும் தினமும் பாடப்படும் பாடல்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 1 வரை, மாலை 4 முதல் 9 வரை.

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT