அக்காலத்து திண்ணை வீடுகள் 
கலை / கலாச்சாரம்

ஆரோக்கியச் சூழலோடு அக்காலத்துப் பாரம்பரிய வீடுகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கிராமத்து வீடுகளின் அழகே தனி. வாசல், திண்ணை, நடை, ரேழி, தாழ்வாரம், முத்தம், தொட்டி முத்தம், கொல்லை, இரண்டாங்கட்டு, சமையல் உள், கொல்லைத் தாழ்வாரம், கிணத்தடி, கோட்டை அடுப்பு, மாட்டுத்தொழுவம், தோட்டம், புழக்கடை என பல வகையான பல்வேறு நிலைகளைக் கொண்டது அந்தக் காலத்து கிராமத்து பாரம்பரிய வீடுகள். அவை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

வாசல் திண்ணை: அந்தக் காலத்து வீட்டு வாசல் திண்ணைகள் இப்போதைய வரவேற்பறையின் மறுபடிவம் என்று கூறலாம். பழங்காலத்தில் வீட்டின் இரண்டு பக்கமும் திண்ணை வைத்து கட்டுவார்கள். வீட்டுப் பெரியவர்கள் மாலை நேரத்தில் காற்று வாங்கவும், வழிப்போக்கர்கள் நடந்து வந்த அசதியில் சிறிது நேரம் இளைப்பாறவும் இந்த இடம் உதவியாக இருக்கும்.

பழங்காலத்தில் யார் திண்ணையில் வந்து அமர்ந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் பயணிகளுக்கு தண்ணீரோ, மோரோ குடிக்கத் தரும் பண்பாடு இருந்தது. உணவு வேளையாக இருந்தால் உணவும் தரப்படும். திண்ணை வீடுகள் தமிழர்கள் செல்வ செழிப்பில் வாழ்ந்ததற்கான அடையாளமாக விளங்கியது. தங்கும் விடுதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ஊர் விட்டு ஊர் பயணம் செய்யும் மக்கள் இரவில் இளைப்பாறவும், படுத்து உறங்கவும் இந்தத் திண்ணைகள் வசதியாக இருந்தன.

வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாகவும், மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் நம்மைக் கடந்து செல்லும்போது குசலம் விசாரிக்கவும், கதை பேசவும் திண்ணைகள் பெரிதும் உதவியாக இருந்தன. ஓலைக் குடிசையாக இருந்தாலும் அங்கும் ஒரு ஒட்டுத் திண்ணை இருக்கும். திண்ணைகள் தந்த சுகத்தை மாடி வீட்டு பால்கனியாலோ, வீட்டின் போர்டிகோவாலோ தர முடியாது!

முற்றம்: வீட்டுக்குள் முற்றம், தாழ்வாரம் ஆகியவை காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டது. முற்றம் என்பது அனைத்துப் பக்கங்களிலும் அறைகளால் சூழப்பட்ட ஒரு திறந்த வெளியாகும். இது குடும்பத்திற்கு ஒரு தனிப்பட்ட வெளிப்புற பகுதியை வழங்குகிறது. சுற்றியுள்ள அறைகளுக்கு இயற்கையான வெளிச்சம், சூரிய ஒளி, காற்று கிடைக்கும். ஆடைகள், தானியங்களை உலர்த்தவும், குழந்தைகள் விளையாடுவதற்கான இடமாகவும் இது உள்ளது. முற்றத்தில் பெரும்பாலும் ஒரு துளசி செடியை வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் விளக்கேற்றுவார்கள்.

முற்றம்

தாழ்வாரம்: இன்றும் பழைய நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளில் பெரிய தாழ்வாரம் வைத்த வீடுகள் உள்ளன. இதில் ஒரு திருமணமே நடத்தலாம். தாழ்வாரத்தை ஒட்டி நீளவாக்கில் பந்தி பரிமாறும் இடமும் இருக்கும். சூரிய ஒளி நேரடியாக நம் வீட்டில் படும்படியாகவும், மழைக்காலங்களில் கூடல்வாய் அமைத்து மழை நீரை சுத்தமாக, நேரடியாகப் பெற்று சமைத்து சாப்பிடவும், குடிப்பதற்கும் பயன்படுத்தினார்கள்.

மாட்டுத் தொழுவம்: வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் வீட்டுக்குத் தேவையான பால் கிடைப்பதற்காக மாட்டு தொழுவமும் நல்ல கரவை மாடுகளும் கட்டப்பட்டு இருந்தன. வெள்ளிக்கிழமையானால் வீட்டில் உள்ள பெண்கள் பசு மாட்டிற்கு நெற்றியில் மஞ்சள் குங்குமம் வைத்து மகாலட்சுமி அம்சமாகக் கருதி அதனை பூஜித்தும் வந்தனர்.

திண்ணை, ரேழி (நடைபாதை), கூடம் (ஹால்), தாழ்வாரம், முத்தம், தொட்டி முத்தம் (இப்பொழுது ஜிங்கில் பாத்திரங்களைப் போட்டு தேய்க்கிறோம் அல்லவா அதுபோல் தொட்டி மாதிரி கட்டி அதை உபயோகிப்பார்கள்), பின்னால் கிணறு ,மாடு வளர்க்க மாட்டு கொட்டகை, கொல்லைப்புறம் என்று கிராம வீடுகள் நீண்டு கொண்டே செல்லும். வீட்டின் பின்புறத்தில் வாய்க்காலில் நீர் ஓடும்.

வீட்டின் நடுவே ஒரு திறந்தவெளிப் பகுதியை உருவாக்கி அதன் மூலம் காற்று, வெளிச்சம் வர மிக அழகாகக் கட்டியிருப்பார்கள். ஆனால், இன்றோ எங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்தான். ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசவும், குசலம் விசாரிக்கவும் மறந்து மெஷின்களாக உலா வருகின்றோம். அன்பைப் பரிமாறிக்கொள்ள ஆட்களும் இல்லை; நேரமும் இல்லை.

கோபத்தை தணிக்க உதவும் வாழ்வியல் மந்திரங்கள்!

மாடித் தோட்டத்தில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

இரவில் அரிசி சாதத்தை தவிர்க்கச் சொல்வது ஏன் தெரியுமா?

ChatGPTயைத் தாண்டிய உலகம்: அடுத்த தலைமுறை AI கருவிகள்! அவசியம் தெரிஞ்சுக்கணும் மக்களே!

இதை தெரிஞ்சுக்கிட்டாலே போதும் முகத்தில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்! 

SCROLL FOR NEXT