‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கல குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம் எனும் அவரின் முழு பெயரே டி.ஆர்.மகாலிங்கம் என திரைத்துறையில் பிரபலமாகியது.
1940 முதல் 1950களில் தமிழ் திரையுலகில் நடிகராகவும் பாடகராவும் பிரபலமாக விளங்கிய டி.ஆர்.மகாலிங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என பல கலைகளிலும் சிறந்த விளங்கினார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்தி பாடல்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. செந்தமிழ் தேன்மொழியாள்; நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள், ஆடை கட்டி வந்த நிலவோ போன்ற இவரது காதல் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்தவர் மகாலிங்கம். ஐந்து வயதிலேயே மேடையேறி நாடகங்ளில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழவந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோயில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்திற்குக் கிடைத்தது. பிரபல பாடகர் எஸ்.சி.கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலி பெருக்கிகள் அதிகம் இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியது அவசியமாய் இருந்தது. அதனால் அந்தக் காலத்து பாடகர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, மகாலிங்கம் எஸ்.சி.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் டி.எம்.சௌந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்கு தகுந்தவாறு பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
அக்காலத்தில் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு என புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 12வது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்தபோது அவரது பாடலைக் கேட்ட பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் படத்தில் இவரை குறும்பு நிறைந்த கண்ணனாக அறிமுகப்படுத்தினார். எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்த பாடலை பாடியபடியே அறிமுகமான மகாலிங்கம் நடித்த இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்டது. ஆனால், இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனாலும் படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் துணை நடிகராக சில படங்களில் பாடி நடித்து புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்கு பெரும் புகழைத் சேர்த்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் 1945ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படத்தில் இவரை கதாநாயகனாக ஏவி மெய்யப்ப செட்டியார் அறிமுகப்படுத்தினார். அப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இவர் முருகனாக நடித்திருந்தார். இவர் நடிகராகவும் பாடகராவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அந்தப் படம் பெரிதும் காரணமாக இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அடுத்து கதாநாயகனாக நடித்த, நாம் இருவர், ஞானசௌந்தரி, வேதாள உலகம், ஆதித்தன் கனவு, மாயாவதி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. ‘நாம் இருவர்’ படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் சுகுமார். இதனால் தனது மகனுக்கு சுகுமார் என அவர் பெயர் வைத்தார்.
தனது 23 வயதிலேயே அக்காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார் டி.ஆர்.மகாலிங்கம். இவரது பாடல்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்ததால் அவரை மற்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடுமாறு கூறினார்கள். ஆனால் அவர், ‘நான் எனது கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் பாடுவேன். வேறு யாருக்கும் பின்னணி பாட மாட்டேன்’ என மறுத்து விட்டார். கடைசி வரை இந்த கொள்கையில் உறுதியாகவும் இருந்தார்.
பிறகு தானே சொந்தமாக படங்களை தயாரிக்க முடிவு செய்து, ‘சுகுமாரன் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘மச்ச ரேகை’ என்ற படத்தைத் தயாரித்தார். அது சுமாராக ஓடியது. அதையடுத்து, சின்னதுரை, விளையாட்டு பொம்மை போன்ற இவரது தயாரிப்பில் வந்த இவரது படங்களின் தோல்விகளால் தனது சொத்துக்களை இழந்தார்.
அடுத்து வந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி, சொந்த ஊரான தென்கரைக்கே சென்றார். இந்த நிலையில், சினிமாவை மறந்து நாடகங்களில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து தாம் தயாரித்த, ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நடிப்பதற்காக டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தார் கவிஞர் கண்ணதாசன். இந்தப் படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கத்தை நடிக்க வைக்க கண்ணதாசன் முடிவு செய்து இருப்பதை அறிந்த திரையுலக ஜாம்பவான்கள் பலர் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். ‘இவருக்கு வேறு கதாநாயகன் கிடைக்கவில்லையா?’ என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள்.
1958ல் வெளியான, ‘மாலையிட்ட மங்கை’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய 15 பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தன. குறிப்பாக, டி.ஆர்.மகாலிங்கம் பாடிய காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளுடன் கூடிய காலத்தால் அழியாத, ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாடல் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது. மேலும், அவர் பாடிய, ‘எங்கள் திராவிட பொன்னாடே’ என்ற பாடல் தமிழக அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கத்துக்கு புத்தம் புது கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
அதன் பிறகு மகாலிங்கத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. இதனால் அவரது திரையுலக வாழ்க்கை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கிச் சென்றது. நடிக்கவும் பாடவும் வந்த வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு நடித்த டி.ஆர்.மகாலிங்கம் தனியாக பாடிய பாடல்கள் மட்டுமின்றி, அவரது டூயட் பாடல்களும் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தன.
நாடகங்களில் நடித்துக்கொண்டே இடையிடையே பாடவும் நடிக்கும் வந்த வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டார். அப்படி அவர் நடித்த படங்களில் திருவிளையாடல், அகஸ்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் போன்றவை அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின் கடைசி படம், ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா.’ இந்தப் படம் 1977ல் வெளியானது. டி.ஆர்.மகாலிங்கம் 1978ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தனது 54வது வயதில் மரணம் அடைந்தார்.
டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தாலும் அவர் தனது கணீர் குரலால் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பாடல்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்ற பாடலை இன்றைய குழந்தைகள் கூட விரும்பித்தானே கேட்கின்றனர். தொலைக்காட்சிகளில் நடைபெறுகின்ற இசை போட்டிகளில் எல்லாம் இன்றும் இந்தப் பாடலை பாடி பெரும் பாராட்டைப் பெறும் பாடகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவ்வளவு காந்தமான குரலுக்கு சொந்தக்காரர் டி.ஆர்.மகாலிங்கம். டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், தமிழ் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய கலைப்பணியை நாமும் நினைவு கூர்வோம்.