உலகின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றான பீட்சா அதன் தனித்துவமான சுவையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் நினைப்பது போல பீட்சா ஒன்றும் சாதாரணமான உணவு அல்ல. அது பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டது. இத்தாலியின் தெருக்களில் தோன்றி, இன்று உலகெங்கும் பரவிய பீட்சாவின் கதை சுவாரஸ்யமான பல திருப்பங்களைக் கொண்டது.
பீட்சாவின் தோற்றம் பற்றிய துல்லியமான தகவல்கள் இல்லை என்றாலும், பண்டைய காலங்களில் அதற்கான அடிப்படைகள் இருந்திருக்கலாம் என சில ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பழங்கால எகிப்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் தட்டையான ரொட்டிகளில் பல்வேறு பொருட்களை வைத்து சாப்பிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவே, பீட்சாவின் முன்னோடி வடிவமாக இருந்திருக்கக்கூடும்.
நவீன பீட்சாவின் பிறப்பு: இன்றைய நவீன பீட்சா 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் நேபிள்ஸ் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அங்கு வாழ்ந்த ஏழை மக்கள், தட்டையான ரொட்டிகளில் தக்காளி, பூண்டு மற்றும் சில மூலிகைகளை வைத்து மலிவான உணவை தயாரித்து சாப்பிட்டனர். இதுவே பின்னர் பீட்சாவாக உருவெடுத்தது. நேபள்ஸ் நகரின் தெருக்களில் பீட்சா விற்பனை செய்யப்பட்டதால், அது வேகமாக பிரபலமடைந்து இத்தாலியின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
மார்கரிட்டா பீட்சா: 1889 ஆம் ஆண்டு இத்தாலிய மன்னர் முதல் உம்பர்ட்டோ மற்றும் ராணி மார்கரிட்டா ஆகியோர், நேபிள்ஸ் நகருக்கு வருகை தந்தனர். அப்போது ராணிக்கு ஒரு சிறப்பு பீட்சா தயாரிக்கப்பட்டது. அந்த பீட்சாவில் தக்காளி, மோசரெல்லா சீஸ் மற்றும் துளசி இலைகள் பயன்படுத்தப்பட்டன. ராணிக்கு இந்த பீட்சா மிகவும் பிடித்திருந்ததால் அந்த பீட்சாவுக்கு ராணியின் பெயரான மார்கரிட்டா என்று பெயரிடப்பட்டது. இன்றுவரை மார்கரிட்டா பீட்சா உலகின் மிகவும் பிரபலமான பீட்சா வகைகளில் ஒன்றாக உள்ளது.
அமெரிக்காவில் பீட்சா: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த போது அவர்களுடன் பீட்சாவையும் கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் இத்தாலிய குடியேறிகள் மட்டுமே பீட்சாவை சாப்பிட்டாலும், பின்னர் அது அமெரிக்கர்களிடையே மிகவும் பிரபலமான உணவாக மாறியது. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க வீரர்கள் இத்தாலியில் பீட்சாவை ருசித்துப் பார்த்த பிறகு, அமெரிக்காவில் பீட்சாவுக்கான தேவை அதிகரித்தது. அதன் பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது பீட்சா.
இன்று உலகில் பல்வேறு வகையான பீட்சாக்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு வகை பீட்சாவும் தனக்கென தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். மேலும், பல்வேறு நாடுகளில் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பீட்சாக்களும் உள்ளன. உங்களுக்கு என்ன பீட்சா பிடிக்கும் என்பதை மறவாமல் கமெண்ட் செய்யவும்.