குளிர் காலத்தில் நம் சருமம் பாதிக்கப்படுகிறது. உதடுகளிலிருந்து பாதங்கள் வரை வெடிப்பு ஏற்பட்டுப் புண்ணாகிறது. இந்தக் குளிர் பருவத்தில் நம் சருமத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்று பார்ப்போமா?
நம் உடலில் செபேஷியல் க்ளாண்ட் என்னும் நாளம் சுரப்பதால் உடலில் இருக்கும் அனைத்துக் கொழுப்புச் சத்துகள், தேவையில்லாத எண்ணெய்ப் பசைகள் நீக்கப்படுகின்றன. இதனால் நம் சருமம் பொதுவாக எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. இந்த நாளம் குளிர்காலங்களில் சுருங்கி விடுவதால் தேவையற்ற பசைகள் வெளியேற வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதனால் எண்ணெய்ப் பசை இல்லாத சரும பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே இந்தப் பருவத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, அதிக அளவு கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
தலை:
குளிர்காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து அடிக்கடி குளிக்க முடியாது. மருதாணி தேய்த்தும் குளிக்க முடியாது. இதனால் முடி உதிர்வது, பொடுகு ஏற்படுவது சகஜம். இதனைத் தடுக்க பார்லரில் சூடான எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து, ஸ்டீம் செய்யலாம்.
இதை வீட்டிலேயே செய்து கொள்பவர்கள், சூடான எண்ணெயை தலையில் பஞ்சினால் தேய்த்து, கை விரல்களால் நீவி விட்டபிறகு, கொதிக்கும் நீரில் டர்கிஷ் துண்டை நனைத்துப் பிழிந்து தலையில் கட்டிவிட வேண்டும். இதனால் உடல் குளிர்ந்து போவதைத் தடுக்கலாம். மேலும் முடியில் வேர்க்கால்களின் துவாரங்கள் திறக்கப்பட்டு ரத்த ஓட்டத்தை திறம்பட இயங்கச் செய்கிறது. தலை முடிக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
முட்டையை உடைத்து வெள்ளைப் பகுதியை மட்டும் எடுத்துத் தலையில் தேய்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை ஊறி, தலைக்கு ஷாம்பு போட்டுக் குளித்தால், தலை வறண்டு போய்ப் பொடுகு வராமல் தடுக்கலாம்.
தேயிலை டிகாக்ஷனுடன் சீயக்காய் அல்லது அரப்பு தேய்த்துக் குளித்தால், முடி பளபளப்பாக இருக்கும்.
முகம்:
முகம் வறண்டு போகாமலிருக்க, சோப் பயன் படுத்துவதைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ப்ளீச்சிங் செய்து கொள்ளக்கூடாது. பார்லரில் சென்று 'ஃபேசியல்' செய்ய முடியாவிட்டால், வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக் கரு, 2 தேக்கரண்டி பால் பவுடர் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் பூச வேண்டும். பிறகு இருபது நிமிடம் கழித்து, முகத்தை மிதமான சூட்டிலுள்ள வெந்நீரிலும், குளிர்ந்த நீரிலும் மாற்றி மாற்றிக் கழுவ வேண்டும்.
குளிர்காலங்களில் முகத்திற்கும், கழுத்துப் பகுதிகளுக்கும் கீழ்கண்ட மாஸ்க்குகளை அவரவர் சரும தன்மைக்கேற்ப, தேர்ந்தெடுத்துப் போட வேண்டும்.
காரட் மாஸ்க் (சென்ஸ்ஸிட்டிவ் ஸ்கின்)
காரட்டில் ஏராளமான வைட்டமின் 'ஏ' இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒரு தேக்கரண்டி அரைத்த காரட் விழுதில், அரை தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க், கண் மற்றும் புருவப்பகுதியில் படக்கூடாது.
உருளைக்கிழங்கு மாஸ்க் (ட்ரை ஸ்கின் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு)
ஒரு மேஜைக்கரண்டி அரைத்த உருளைக் கிழங்கு பேஸ்ட்டில், அரை தேக்கரண்டி தயிர் சேர்த்துக் கலந்து, முகத்தில் தடவி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.
ஈஸ்ட் மாஸ்க் (ஆயில் ஸ்கின் - எண்ணெய்ப் பசை உள்ளவர்களுக்கு)
ஒரு தேக்கரண்டி ஈஸ்ட் பவுடரில், ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து, கலந்து முகம் முழுவதும் பூசவும். இருபது நிமிடங்கள் கழித்து வெந்நீரிலும், குளிர்ந்த நீரிலும் மாற்றி மாற்றி முகத்தைக் கழுவ வேண்டும்.
குளிர்காலங்களில் ரசாயனப் பொருட்கள் உள்ள சோப்பைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களைக் கொண்டே முகத்தைக் கூடியவரை சுத்தம் செய்யவும். கடலை மாவு, பயற்ற மாவு, வாசனைப் பொடி முதலியவை நல்ல பயன்களைத் தரும்.
இந்தப் பருவங்களில் வறண்ட சருமம் உடையவர்கள் சிட்ரிக் ஆசிட் உள்ள எலுமிச்சைச் சாறு போன்றவற்றை சாப்பிடக்கூடாது. பால் ஏட்டுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்துக் குளித்தால், வறண்ட சருமத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கி மென்மையாக இருக்கும்.
எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்குக் குளிர்காலத்தில் சருமத்தில் சுருக்கங்களும் கறுப்புத் திட்டுகளும் ஏற்படும். இதற்கு புளிப்புத் தன்மையுடைய சாத்துக்குடி, ஆரஞ்சு, கறுப்புத் திராட்சை, பப்பாளி, தக்காளி போன்ற பழங்களில் ஒன்றின் சாறை எடுத்து, வாரத்தில் மூன்று முறை தேய்த்துக் குளித்தால், சுருக்கமும், கறுப்புத் திட்டுகளும் நீங்கி விடும். இரவில் அனைவரும் மாய்ஸ்ட்டுரைசிங் க்ரீம் தடவிக் கொண்டு படுக்க வேண்டும்.
இந்தப் பருவங்களில் 'மேக்கப்' செய்துகொள்ளும் முன், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, மிகக் குறைவான அளவு கோல்ட் க்ரீம் போட்ட பிறகே, பவுண்டேஷன் க்ரீம், காம்பாக்ட் முதலியவற்றைப் போட வேண்டும். மேக்கப்பைக் கலைக்கும்போது பஞ்சில் எண்ணெய் தொட்டு முகம் முழுதும் தடவி, பிறகு மிதமான சோப் அல்லது பயற்றமாவில் முகத்தைக் கழுவ வேண்டும்.
உதடு:
குளிர்காலங்களில் அநேகம் பேருக்கு உதட்டில் வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இப்படி வெடிப்பு ஏற்படும்போது, வெண்ணெய், வாஸ்லின், கிளிசரின், தயிர் ஆகியவற்றல் ஏதேனும் ஒன்றைத் தடவி வர வேண்டும். இப்படித் தடவினால், வெடிப்பு ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடு கறுப்பாவதையும் தடுக்கலாம்.
உதடு வறண்டு போவதைத் தடுக்க குங்குமப் பூவுடன், பால் கலந்து, உதட்டில் தேய்த்துக் காய்ந்ததும் கழுவி விடவும். பீட்ரூட்டைத் துருவி அதை உதட்டின் மீது தடவினால், உதட்டின் கறுமை நிறம் மாறி, சிவப்பாகும். உதடு வறண்டு போவதைத் தடுக்க லிப் க்ளாஸ், லிப் கார்ட் அல்லது லிப் பாம்மை உபயோகிக்கலாம்.
மூக்கு மற்றும் கழுத்து:
கழுத்துப் பகுதியும், மூக்கின் இரு பக்கங்களும் கறுப்பாக உள்ளவர்கள் வைட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி, ஓட்டை போட்டு, கறுப்புப் பகுதிகளில் தடவி ஊறியபிறகு கழுவிவிட வேண்டும். கோதுமை மாவு, பயற்றமாவு, ஓட்ஸ் மாவு ஆகிய மூன்றையும் சமமாக எடுத்துக்கொண்டு, அதில் எலுமிச்சைச் சாறை ஊற்றிக் கலந்து, கழுத்திலும், மூக்கின் பக்கவாட்டிலும் தடவி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவினால், நாளடைவில் கறுப்பு நீங்கிவிடும்.
கை கால்கள் பராமரிப்பு:
குளிர்காலத்தில் இரவு நேரத்தில் கைகளிலும், பாதங்களிலும், கால்களிலும் ஹாண்ட் அண்ட் பாடி லோஷன் தடவ வேண்டும். அநேகம் பேருக்கு, பித்த வெடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகும். நாளடைவில் பலருக்கு வலி அதிகமாகி, வெடிப்பிலிருந்து ரத்தம் கசியும். வெடிப்பு ஏற்படும் தன்மையுடையவர்கள் பாதங்களில் வாஸ்லின், க்யூட்டிகல் க்ரீம், பாரபின் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி ஆகிய அனைத்தையும் தடவ வேண்டும். இவற்றைக் கலந்து தயாரிக்கும் க்யூட்டிகல் க்ரீம் அழகு நிலையத்தில் கிடைக்கிறது.
வெடிப்பு உள்ளவர்கள் மொசைக் தரையில் காலணிகளுடன் நடப்பது நல்லது. இரவு நேரங்களில் தேங்காய் எண்ணெய் தடவலாம். நகங்களில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க ஆலிவ் ஆயில், வைட்டமின் ஈ ஆயில் தடவ வேண்டும்.
உடல்:
உடல் சருமம் வறண்டு போகாமலிருக்க லோஷன் மற்றும் மாய்ஸ்டுரைசிங் க்ரீம் தடவ வேண்டும். மாதம் ஒருமுறை அழகு நிலையத்தில் பாடி மசாஜ் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ஜான்சன்ஸ் பேபி ஆயில், வைட்டமின்-ஈ ஆயில், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றால் உடல் முழுவதும் மசாஜ் செய்யப்படுவதால், நரம்புகளுக்குத் தெம்பு ஏற்படுகிறது. மசாஜ் செய்துகொள்ள முடியாதவர்கள், வீட்டிலேயே மேற்கூறிய எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய், மூலிகை க்ரீம்களைத் தடவிக்கொள்ளலாம்.
பருவ வயதுப் பெண்களின் சருமம் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டுவிடும். எனவே சருமத்தின் தன்மையைக் கண்டுபிடித்து அதற்கேற்ப குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய் தடவி, பச்சைப் பயிரையும் வாசனைப் பொடியையும் கலந்து தேய்த்துக் கொள்வது பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க சிறந்த வழியாகும். பயற்றமாவு, அரப்புப்பொடி தேய்த்துக் குளிப்பதால் தேவையற்ற இறந்த செல்கள் நீக்கப்பட்டு விடும். பயற்ற மாவு, வாசனைப் பொடி, கஸ்தூரி மஞ்சள் கலந்து தேய்த்துக் குளித்தால் பூனை முடி உதிரும். முகத்தில் பருக்கள் ஏற்படாது. சருமத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கப்பட்டு பட்டாக மேனி மிளிரும்.
நன்றி: மங்கையர் மலர்.