அழகு என்பது சருமத்தை மட்டுமல்ல நமது மனதையும் பிரதிபலிக்கிறது. ஜொலிக்கும் ஆரோக்கியமான சருமம் நம் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். எனவே நம் சருமத்தை பளபளப்பாக மாற்றும் ‘டைமண்ட் பேசியல்’ முகத்தை பிரகாசமாக்கி, புத்துணர்ச்சியூட்டி, வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவும் ஒரு சிறந்த சிகிச்சையாகும். பொதுவாக ஸ்பாக்களில் செய்யப்படும் இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் சில எளிய இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே டைமண்ட் பேஷியல் செய்ய முடியும். அது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கிளென்சிங்:
பால் - 2 ஸ்பூன்
பஞ்சு
ஸ்க்ரப்:
ஓட்ஸ் அல்லது கோதுமை மாவு - 2 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன் (வறண்ட சருமத்திற்கு) அல்லது ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் (சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு)
மசாஜ்:
தயிர் - 3 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் (எண்ணெய் பசை சருமத்திற்கு மட்டும்)
பேக்:
சந்தன தூள் - 1 ஸ்பூன்
ரோஜா நீர் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
டோனர்:
ரோஜா நீர்
வெள்ளரிக்காய் சாறு
டைமண்ட் பேஷியல் செய்முறை:
கிளென்சிங்: முதலில் சருமத்தை மென்மையான ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பைப் பயன்படுத்தி நன்கு கழுவவும். அடுத்ததாக காய்ச்சி ஆற வைத்த பாலை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். கண்கள் மற்றும் உதடுகளை தவிர்த்து மெதுவாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அப்படியே பத்து நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவி துடைக்கவும்.
ஸ்க்ரப்: ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் அல்லது கோதுமை மாவை பால் அல்லது ரோஜா நீருடன் கலந்து பேஸ்ட் போல தயாரிக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். கண்கள் மற்றும் உதடுகளில் தடவுவதைத் தவிர்க்கவும். இது 5 நிமிடங்கள் அப்படியே ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தைத் துடைத்து விடுங்கள்.
மசாஜ்: ஒரு கிண்ணத்தில் தயிர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தடவி விரல்களை மேல் நோக்கி மசாஜ் செய்யவும். பின்னர் 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக்: ஒரு கிண்ணத்தில் சந்தனத்தூள், ரோஜா நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த கலவையை கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகம் மற்றும் கழுத்தில் சமமாகத் தடவி அப்படியே ஆறவிடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து ஃபேஸ் பேக்கை கழுவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்.
டோனர்: ஒரு ஸ்பிரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் ஸ்பிரே செய்யவும். அடுத்ததாக இத்துடன் சேர்த்து மாய்ஸ்சரைசர் தடவுவது நல்லது.
இந்த ஐந்து படிகளையும் சரியாக செய்து முடிப்பதுதான் டைமண்ட் பேசியல். இதை வீட்டிலேயே நீங்கள் எளிதாக செய்யலாம். வாரம் ஒரு முறை செய்தால் முகம் எப்போதும் பளபளப்பாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கும். இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.