உடம்பில் எந்த இடத்தில் கருவளையம், கருமை ஏற்பட்டிருந்தாலும் அது அழகுக்கு பங்கம் விளைவிப் பதாகவே இருக்கும். அதற்கு இயற்கையாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே வைத்தியம் செய்து கருவளையத்தை அடையாளம் தெரியாமல் போக்கிவிடலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது இதோ:
கண்ணில் கருவளையம் மறைய:
கருவளையம் நீங்க வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அக்கலவையை துணியில் முடிந்து பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். ஒரு வாரம் இப்படி செய்தாலே கருவளையம் காணாமல் போய்விடும்.
இடுப்பில் கருவளையம் போக:
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் இடுப்பை சுற்றி கருப்பு தழும்பு ஏற்பட்டுவிடும். தேங்காய் எண்ணெயை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தாலே போதும். பொதுவாக கருப்பு தழும்பு மறைய ஆரம்பித்துவிடும்
கழுத்தில் கருவளையம் போக:
கோதுமைமாவில் வெண்ணையை கலந்து கழுத்தை சுற்றி பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தினசரி இப்படி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் போய்விடும்.
சரும கருமை நீங்க:
கஸ்தூரி மஞ்சள், சந்தனம், ஆவாரம்பூ, ரோஜா மொட்டு, வேப்பிலை, எலுமிச்சம் பழத்தோல் இவைகளை காயவைத்து அரைத்துக் கொள்ளவும். இதில் பசும்பால் விட்டு கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவிவிடவும். இதை தினமும் செய்து வந்தால் சருமம் கருமை நீங்கி அழகு பெறும்.
முட்டிகளில் கருமை மறைய:
கை முட்டியில் கறுப்பு மறைய வெள்ளரி விதை, கடுக்காய் தோல், சந்தனப்பொடி ஆகியவற்றை அரைத்து சலித்து கழுத்துப்பகுதி, கையின் முட்டியில் பூசி வந்தால் கருமை நிறம் மறையும்.
எலுமிச்சைப் பழத்தோலை காலின் அடிப்பாதம், கைமுட்டி, கணுக்கால் முட்டி, முகம் போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால், தடவிய இடங்களில் கருமை குறையும்.
நெற்றிக்கருமை நீங்க:
கடுக்காயை அரைத்து நெற்றியில் உண்டாகும் அலர்ஜி புண்ணுக்கு போட்டுக் கொண்டே இருந்தால் புண் சீக்கிரம் ஆறிவிடும். செயற்கை பொட்டு, ஸ்டிக்கர் போன்றவற்றால் ஏற்பட்ட கருமை நிறம் மாறிவிடும்.