5 Benefits of Switching to Renewable Energy 
பசுமை / சுற்றுச்சூழல்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதன் ஐந்து நன்மைகள்!

கிரி கணபதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய மாற்றம் என்பது நமது காலத்தின் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைப் போலல்லாமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் அதிகப்படியான நன்மைகளை வழங்குகிறது.

1. குறைந்த கார்பன் வெளியேற்றம்: நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதன் மிகப்பெரிய சாதகம் என்னவென்றால், அதனால் குறைந்த கார்பன் வெளியேறுகிறது என்பதுதான். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான சூரியன், காற்று மற்றும் நீர் போன்றவற்றால் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளியேறுவதில்லை. இதனால், புதைப்படிவ எரிபொருட்களில் இருந்து விலகிச் செல்வதன் மூலமாக உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை, தீவிர வானிலை நிகழ்வுகளினால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கலாம்.

2. ஆற்றல் செலவு சேமிப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் நீண்ட கால செலவு சேமிப்பை உறுதி செய்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட செலவு அதிகமாக இருந்தாலும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருளை உற்பத்தி செய்யும் நிலையங்களுடன் ஒப்பிடும்போது, இதற்கான அமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவு எனலாம். உதாரணத்திற்கு சோலார் பேனல்களை பராமரிப்பதற்கு எந்த செலவும் இல்லை என்பதால், ஒருமுறை பொருத்திவிட்டால் பல ஆண்டுகளுக்கு இதனால் மின்சாரம் உருவாக்க முடியும்.

3.வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி: புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களான சூரியப் பண்ணைகள் மற்றும் காற்றாலை போன்றவற்றிற்கு அதை நிறுவுதல், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கு திறமையான பணியாளர்கள் தேவை. இதனால் உற்பத்தி, கட்டுமானம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும், இது உள்ளூர் பொருளாதாரத்தைத் தூண்டி புதிய வணிகங்களை ஏற்படுத்துகிறது.

4. ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம்: எல்லா விஷயங்களுக்கும் பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களையே சார்ந்திருப்பதைக் குறைப்பதால், புதிய ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது. உலகின் பல நாடுகள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை நம்பியுள்ளதால், அவற்றின் திடீர் விலையேற்றம் மற்றும் இறக்கங்கள் பல இடையூறுகளைக் ஏற்படுத்துகிறது. எனவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் நாம் வெளிநாட்டு எரிசக்தி ஆதாரங்களை நம்பியிருக்க வேண்டாம் என்ற தைரியத்தையும் சுதந்திரத்தையும் கொடுக்கிறது.

5. மேம்படுத்தப்பட்ட காற்றின் தரம் மற்றும் பொது சுகாதாரம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதன் மூலமாக காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும். இதனால் பொது சுகாதாரம் உண்டாகும். பெட்ரோல், டீசல் போன்றவை வளிமண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசுக்களை அதிகரிக்கிறது. இதனால் சுவாச நோய்கள், இதய நோய்கள் மற்றும் சில சமயங்களில் மரணங்கள் கூட ஏற்படுகிறது. எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக அதிகப்படியான மாசுபாட்டைக் குறைத்து, சமூகத்தை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றலாம்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT